உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் ரசிகர்கள் பி சி சி ஐயை கழுவி ஊற்ற தொடங்கி விட்டனர். இதனால் இழந்த பெருமையை மீண்டும் மீட்பதற்காக நானும் ரௌடி தான் என்ற வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
நெதர்லாந்து, அயர்லாந்து போன்ற அணிகளுடன் கூட தோற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் போட்டியில் இந்தியா போன்ற அணியை எதிர்கொண்டால் அவர்களுடைய நிலைமை என்ன ஆகும். நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்கள் சுருண்டது. இதில் தமிழக வீரர் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனை அடுத்து இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் களமிறங்கியது. இதில் அறிமுக வீரராக ஜெய்ஸ்வால் ஓப்பனிங்கில் களமிறங்கினார்.
ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தது. முதலில் ரன் சேர்க்க இருவரும் கொஞ்சம் தடுமாறினாலும், பிறகு தங்களை நிலை நிறுத்திக் கொண்டு பொறுமை காத்து ரன்களை சேர்த்தனர். இதன் காரணமாக இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். அறிமுக போட்டியிலேயே ஜெய்ஸ்வால் 104 பந்துகளை எதிர் கொண்டு 50 ரன்கள் பூர்த்தி செய்தார். இதில் ஏழு பவுண்டரிகள் அடங்கும். மறுபுறம் கேப்டன் ரோகித் சர்மா 106 பந்துகளை எதிர் கொண்டு 50 ரன்கள் எட்டினார்.
இதில் நான்கு பவுண்டர்களும் இரண்டு இம்மாலய சிக்சர்களும் அடங்கும். இதன்மூலம் இந்திய அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 100 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் அருகே இந்திய அணி வந்துவிட்டது.
இதனால் தற்போது இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது. இன்னும் ஒரு விக்கெட் கூட விழாத நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை எட்டுமா என்ற எதிர்பார்த்து எழுந்துள்ளது.
இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்வியை சந்தித்தாலும் அது அவர்களுடைய பலவீனத்தையே காட்டுமே தவிர இந்தியாவின் பலத்தை அது பறைசாற்றாது என்று கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.