- Advertisement -
Homeவிளையாட்டுவெறும் 13 பந்துகளில் அரைசதம். ஐபிஎல் வரலாற்றிலேயே இது தான் அதிவேக அரைசதம்… சும்மா நெருப்பா...

வெறும் 13 பந்துகளில் அரைசதம். ஐபிஎல் வரலாற்றிலேயே இது தான் அதிவேக அரைசதம்… சும்மா நெருப்பா ஒரு இன்னிங்ஸ் – ஜெய்ஸ்வாலின் தரமான சம்பவம் – வீடியோ

- Advertisement-

ஐபிஎல் 2023 சீசனின் 56 ஆவது போட்டி நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்து ஐபிஎல் போட்டித்தொடரின் மிக அதிவேக அரைசதம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவரின் அதிரடியால் ராஜஸ்தான் அணி 14 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தவண்ணம் இருந்தன. அதனால் அந்த அணியால் ரன்ரேட்டை துரிதப்படுத்தி விளையாட முடியவில்லை.

அந்த அணியில் நிலைத்து நின்று ஆடிய நடுவரிசை வீரர் வெங்கடேஷ் ஐயர் மட்டுமே 42 பந்துகளில் 57 ரன்கள் அதிகபட்சமாக சேர்த்தார். இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 149 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ராஜஸ்தான் சார்பாக சஹால் 4 விக்கெட்களை அதிகபட்சமாக வீழ்த்தி அசத்தினார்.

151 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு இறங்கிய ராஜஸ்தான் அணியின் 21 வயது இளம் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே தனது அதிரடி இன்னிங்ஸை தொடங்கினார். நிதிஷ் ராணா வீசிய முதல் ஓவரில் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக 26 ரன்கள் சேர்த்தார். அடுத்தடுத்து வந்த ஓவர்களிலும் அவர் அதிரடி தொடர 13 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். ஐபிஎல் தொடரிலேயே மிகக்குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட மின்னல் வேக அரைசதமாக அவரது இந்த இன்னிங்ஸ் சாதனைப் படைத்தது.

- Advertisement-

இதனால் இந்த போட்டியில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் தன்னுடைய வேகத்தைக் கொஞ்சம் குறைத்தார். இதனாலும், இடையில் கேப்டன் சஞ்சு சாம்சனின் அதிரடியான ரன்குவிப்பாலும், அவரால் சதத்தை நிறைவு செய்ய முடியவில்லை. 47 பந்துகளில் 98 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது இன்னிங்ஸில் 13 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடக்கம்.

ஜெய்ஸ்வாலின் இந்த அதிரடி இன்னிங்ஸை முன்னாள் வீரர்கள், சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்திய அணிக்கு அடுத்த தொடக்க ஆட்டக்காரர் கிடைத்துவிட்டார் என்றும் இப்போதே பேச்சுகள் எழ ஆரம்பித்துவிட்டன.

சற்று முன்