இந்தியாவில் தற்போது தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் ஆடிவரும் பல பேட்ஸ்மேன்களை விட சிறப்பாக ஆடக்கூடிய திறன் உள்ள வீரர்களில் ஒருவர் தான் சஞ்சு சாம்சன். கடந்த பல ஆண்டுகளாகவே இவர் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து வந்தாலும் ஏதாவது ஒரு காரணங்களின் பெயரில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமலே இருந்து வந்தது.
முழுமையாக ஒரு தொடரில் அனைத்து போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் ஆடாமலே இருக்கும் நிலையில், கடந்த ஜூன் மாதம் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையிலும் இந்திய அணியில் தேர்வாகி இருந்தார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், ரிஷப் பந்த் அனைத்து போட்டிகளிலும் ஆடி இருந்ததால் அவரால் ஒரு போட்டியில் கூட உலக கோப்பையில் களமிறங்க முடியாமல் போயிருந்தது.
ஆனாலும் அவர் அணியில் இடம் பிடித்திருந்ததே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது நடந்து வரும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் தேர்வாகி இருந்தார். ஆனால், டி20 போட்டிகளை விட ஒரு நாள் போட்டிகளில் சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடி வரும் நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை.
வேண்டுமென்றே சஞ்சு சாம்சனை நிறைய போட்டிகளில் புறக்கணித்து வருவதுடன் ஒரு நாள் போட்டிகளில் களமிறக்காமல் இருப்பது அதிக விமர்சனங்களை சந்தித்திருந்தது. மேலும், டி20 தொடரின் 2 வது போட்டியில் ஆடியிருந்த சாம்சன், முதல் பந்திலேயே அவுட்டாகி இருந்தார். தொடர்ந்து, வாய்ப்பு கிடைத்தால் அவரால் நல்ல ஃபார்மில் இருந்து ரன் சேர்க்க முடியும் என்றும், இப்படி மற்ற வீரர்கள் இல்லை என்னும் போது வாய்ப்பு கொடுத்தால் எப்படி அவரால் நெருக்கடியின்றி ஆட முடியும் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே, சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக முன்னாள் இந்திய வீரர் யோஹன்னன் சில கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார். “10 ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகமான சாம்சன், இந்திய அணிக்கு வெளியேயும் உள்ளேயும் என இருந்து வருகிறார். எப்போதும் நிறைய வாய்ப்புகள் அவருக்கு கிடைத்ததில்லை. அவர் ஆடும் ஒவ்வொரு போட்டியும் வாழ்வா சாவா போன்றது.
அவர் பேட்டிங் செய்ய செல்லும் போதும் நெருக்கடியான சூழலில் தான் ஆடி வருகிறார். இதனால், அவருக்கு நிறைய வாய்ப்புகளை தொடர்ந்து கொடுக்க வேண்டும். அவருக்கு நிறைய ஆதரவையும் கொடுக்க வேண்டும். ரிஷப் பந்த் திரும்ப வந்துள்ளதால் சஞ்சு சாம்சனுக்கான வாய்ப்பு கடினம் என்பது தெரியும். ஆனால், அவரை தொடர்ந்து ஆட வைக்க வேண்டும்.
சஞ்சு சாம்சன் கடைசி ஒரு நாள் போட்டியில் சதமடித்தும் ஒரு நாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. அவர் எப்போதும் நெருக்கடி இல்லாமல், மிக எளிதாக ஆடக்கூடியவர்” என யோஹன்னன் தெரிவித்துள்ளார்.