சிஎஸ்கே அணிக்காக கடந்த சில சீசன்களாகவே நன்றாக ஆடி வரும் ஷிவம் துபே, அதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடி வந்தார். அந்த இரண்டு அணிகளுக்காக ஆடிய ஆட்டத்திற்கும், சிஎஸ்கே அணிக்காக அவர் செய்த பேட்டிங்கிலும் நிறைய முன்னேற்றங்கள் மற்றும் வித்தியாசங்களும் இருந்தது.
ஆர்சிபி அணியில் அவர் ஆடிய போது, அவரது பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுமே அதிக விமர்சனத்தை சந்தித்திருந்தது. இவரால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனதால் சர்வதேச அணியில் ஆடும் வாய்ப்பும் பெரிதாக கிடைக்கவில்லை. அப்படி ஒரு சூழலில் தான், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் ஷிவம் துபே.
அந்த நாள் முதல் இன்று வரையிலும் அவரது ஆட்டமே இதுவரை பார்க்காத வகையில் இருந்து வருகிறது. முழு நேர பேட்ஸ்மேனாக சிஎஸ்கே அணியில் இயங்கி வரும் ஷிவம் துபே, தான் சந்திக்கும் முதல் பந்தையே சிக்சருக்கு அனுபவத்தை பல போட்டிகளில் வழக்கமாக கொண்டு வருகிறார். சில போட்டிகளில் சிறப்பாக அவர் ஆட தவறிய போதிலும், நிர்வாகத்தினர் மற்றும் தோனி ஆகியோர் தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்ததன் காரணமாக, சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த முடிந்ததாகவும் ஷிவம் துபே தெரிவித்திருந்தார்.
மேலும் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் இதுவரை நடந்த 4 போட்டிகளில் ஒரு போட்டியை தவிர மற்ற அனைத்திலும் சிறப்பாக ஆடி ரன் சேர்த்திருந்தார். ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், மற்ற எந்த வீரர்களும் ரன் சேர்க்க சிரமப்பட்ட போது தனியாளாக போராடி ரன் சேர்த்தார் ஷிவம் துபே. 4 சிகர்சல் சேர்த்து 24 பந்துகளில் 45 ரன்கள் அடித்திருந்த ஷிவம் துபே, இந்த தொடர் முழுக்க இதே போன்றொரு அதிரடியை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கையிலும் ரசிகர்கள் உள்ளனர்.
அப்படி ஒரு சூழலில் தான் ஷிவம் துபேவின் பேட்டிங்கை பாராட்டி, இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் சில கருத்துக்களைத் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். யுவராஜ் சிங்கை போல இடதுகை பேட்ஸ்மேனான ஷிவம் துபே, அவரை போலவே கிரீஸில் நின்று பெரிய சிக்ஸர்களை அடித்து வருவதால் அடுத்த யுவராஜ் சிங் என்ற பெயரும் ரசிகர்களால் உருவாகி இருந்தது.
இதனிடையே, யுவ்ராஜ் சிங்கே தற்போது ஷிவம் துபே பற்றி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிக எளிதாக பந்தை சிக்சருக்கு ஷிவம் துபே பறக்க விடுவதை பார்க்க அழகாக உள்ளது. அவர் இந்தாண்டு டி 20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருக்க வேண்டும் என நான் உணர்கிறேன். அதன் கேம் சேஞ்சராக இருப்பதற்கான அத்தனை திறனும் அவரிடம் உள்ளது” என மனதார பாராட்டி உள்ளார்.