சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர்களான சாஹல், ரவிச்சந்திரன் அஸ்வின், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் உள்ளிட்டோர் சேர்க்கப்படவில்லை. குறிப்பாக நட்சத்திர ஸ்பின்னரான சாஹல் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் பெங்களூருவில் உள்ள என்சிஏவில் பயிற்சி பெற்று வருகின்றனர். இதனிடையே தேர்வு செய்யப்படாத வீரர்கள் குறித்தும், அவர்களின் உணர்வு குறித்தும் ரோகித் சர்மா பேசி இருக்கிறார். அந்தப் பேட்டியில், 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படாததால் எனது அறையில் அமைதியாக சோகத்துடன் அமர்ந்திருந்தேன்.
அப்போது யுவராஜ் சிங் தான் என்னை அவரது அறைக்கு அழைத்து, இரவு உணவு சாப்பிட அழைத்து சென்றார். அவர் என்னிடம் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாத உணர்வு எப்படி இருக்கும் என்று பக்குவமாக எடுத்து கூறினார். அவர் என்னிடம், உனக்கு இன்னும் அதிக ஆண்டுகள் இருக்கிறது. உன்னால் ஏராளமான ஆண்டுகள் அடுத்து கிரிக்கெட்டை தொடர முடியும்.
நாங்கள் உலகக்கோப்பை விளையாடும் போது, நீ உனது ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க கடினமாக உழைக்க வேண்டும் என்று தெரிவித்தார். யுவராஜ் சிங்கின் அட்வைஸ்-க்கு பின் நான் மீண்டும் பேட்டிங் பயிற்சியை தொடங்கினேன். உலகக்கோப்பை தொடருக்கு பின் உடனடியாக என்னால் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முடிந்தது.
அதற்கு பின் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறேன். இதுதான் நான். அதனால் உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்படுவது எப்படி இருக்கும் என்பது எனக்கு நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார். 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை வென்றதன் மூலம் இந்திய ரசிகர்களின் 28 ஆண்டு கால ஏக்கத்தை தோனி தலைமையிலான இந்திய அணி முடிவுக்கு கொண்டு வந்தது.
அந்த உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக சுழற்பந்துவீச்சாளரான பியூஷ் சாவ்லா அணியில் இருக்க வேண்டும் என்பதில் தோனி உறுதியாக இருந்தார் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் ரோகித் சர்மா தேர்வு செய்யப்படாதது இன்று வரை ரோகித் சர்மா கவலை தெரிவித்து வருகிறார்.