சத்யம் பாபு என்ற இயற்பெயரை கொண்ட சரத்பாபு, தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர். இவர் தனது இளம் வயதில் போலீஸ் அதிகாரியாக ஆகவேண்டும் என நினைத்தார். ஆனால் அவருக்கு கிட்ட பார்வை இருந்ததால் போலீஸில் சேர முடியவில்லை. ஆனால் அவருடன் பழகிய பலரும் அவரது உடல்நிறத்தையும் தோற்றத்தையும் பார்த்து சினிமாவில் ஹீரோவாக நடிக்க பொருத்தமான ஆள் என கூறுவார்களாம். அவ்வாறு அவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை பிறந்திருக்கிறது.
ஆந்திராவை சேர்ந்த சரத் பாபு, தொடக்கத்தில் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து அவர் தமிழில் அறிமுகமான திரைப்படம் பாலச்சந்தரின் “பட்டின பிரவேசம்”. அதன் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தார்.
குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த “முள்ளும் மலரும்”, “அண்ணாமலை”, “முத்து” ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தார். திரைப்படங்கள் மட்டுமல்லாது பல தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார் சரத்பாபு.
இந்த நிலையில் கடந்த மாதம் சரத்பாபுவின் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்பட்டது. திடீரென அவர் உயிரிழந்துவிட்டார் எனவும் தகவல் வந்தது. ஆனால் அது வெறும் வதந்தி என்று தெரியவந்தது. இதனை தொடர்ந்து தற்போது சரத்பாபு மரணமடைந்துவிட்டார் என்று அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளிவருகின்றன. சரத்பாபு செப்சிஸ் என்ற நோயால் அவதிப்பட்டு வந்தார் என்று கூறப்படுகிறது. இந்த நோயால் அவரது பல உறுப்புக்கள் செயலிழந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது சரத்பாபு மரணமடைந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.