தெலுங்கு சினிமா உலகில் அறிமுகமானாலும் தமிழ் சினிமா உலகிலும் மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் சரத்பாபு. இவர் தென்னிந்திய மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் ரஜினிகாந்துடன் இணைந்து “முள்ளும் மலரும்”, “அண்ணாமலை”, “முத்து” ஆகிய திரைப்படங்களில் சரத்பாபுவின் நடிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. மேலும் இத்திரைப்படங்களின் மூலம் சரத்பாபு தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிதும் பரிச்சயமானார்.
சரத்பாபு கடந்த சில மாதங்களாகவே செப்சிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கான சிகிச்சைகள் மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று சரத்பாபு திடீரென மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளிவந்தன. இதனால் தென்னிந்திய திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியது.
சரத்பாபுவின் இறப்பிற்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை சரத்பாபுவின் இல்லத்திற்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த நடிகை சுஹாசினி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர், “சரத்பாபு 92 நாட்களாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன் முதலில் இரண்டு மாதங்கள் காய்ச்சல் காரணமாக பெங்களூரில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அங்கு அவர்களது உறவினர்கள் நிறைய பேர் உள்ளனர்.
ஆனால் அங்கு போன பின் அங்கிருக்கும் மருத்துவர்களால் அவர் உடலில் என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை. இரண்டு மாதத்திற்கு பிறகுதான் அவருக்கு மல்டிப்பிள் மயலோமா என்ற நோய் இருப்பதாக கண்டறியப்பட்டது. அவருக்கு ஹைதராபாத்தில் சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். ஆதலால் அங்கே இருந்த ஒரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கே நானும் நடிகர் சிரஞ்சீவியும் சென்று அங்குள்ள மருத்துவர்களிடம் சரத்பாபுவின் உடல்நிலை குறித்து பேசினோம். அவர்கள் ‘எங்களால் முடிந்தவரை அவரை காப்பாற்றுவோம்’ என கூறினார்கள். ஆனால் மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் சரத்பாபு நேற்று மதியம் 1.30 மணிக்கு அவர் காலமாகிவிட்டார்” என சுஹாசினி கூறினார். சரத்பாபுவின் இறப்பிற்கு திரையுலகை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.