அஜித்குமார் “துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து தனது 62 ஆவது திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் கைக்கோர்க்கவுள்ளதாக கூறப்பட்டது. கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வமாக அறிவிக்க லைகா நிறுவனம் தயாராகவே இருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் “ஏகே 62” புராஜெக்ட்டில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறினார்.
விக்னேஷ் சிவன் “ஏகே 62” புராஜெக்ட்டில் இருந்து வெளியேறியதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. அதாவது குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் விக்னேஷ் சிவன் முழு ஸ்கிரிப்ட்டை முடித்துத் தரவில்லை எனவும், அவர் கூறிய கதை அஜித்திற்கு பிடிக்கவில்லை எனவும் செய்திகள் வெளிவந்தன. இது குறித்து பல பேட்டிகளில் விக்னேஷ் சிவனிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது அவர் இந்த கூற்றுகளை மறுத்துவிட்டார்.
அதனை தொடர்ந்து “ஏகே 62” திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார் என செய்திகள் வெளிவந்தன. அதன் பின் இத்தகவலை உறுதி செய்தது லைகா நிறுவனம். மேலும் இத்திரைப்படத்திற்கு “விடாமுயற்சி” என்றும் டைட்டில் வைக்கப்பட்டது.
ஒரு பக்கம் அஜித் ரசிகர்கள் “விடாமுயற்சி” என்ற டைட்டில் வேற லெவலில் இருப்பதாக கூறிவந்தாலும், இன்னொரு பக்கம் பொதுவான ரசிகர்கள் அஜித் மீண்டும் “V” சென்டிமென்ட்டில் சிக்கிக்கொண்டார் என்று விமர்சித்து வருகின்றனர். “வீரம்”, “வேதாளம்”, “விவேகம்”, “விஸ்வாசம்”, ஆகிய “வி” டைட்டில்களை தொடர்ந்து தற்போது “விடாமுயற்சி” என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
“விடாமுயற்சி” திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. விஜய்யின் 68 ஆவது திரைப்படம் வெளிவரும் அதே நாளில் “விடாமுயற்சி” திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் “விடாமுயற்சி” திரைப்படம் குறித்து ஒரு சூடான தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது “விடாமுயற்சி” திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளாராம். மேலும் இதில் இரண்டு கதாநாயகிகளை நடிக்க வைக்க உள்ளார்களாம்.
இத்திரைப்படத்தில் ஹீரோயின்களாக நடிப்பதற்கு ஐஸ்வர்யா ராய், கங்கனா ரனாவத், த்ரிஷா போன்றோரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.