ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் “இந்தியன் 2” திரைப்படம் தற்போது மும்முரமாக உருவாகி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு “இந்தியன் 2” படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூன்று தொழில்நுட்ப கலைஞர்கள் உயிரிழந்தனர். அதன் பின் “இந்தியன் 2” படப்பிடிப்பு முடங்கியது. மேலும் கொரோனா ஊரடங்கும் தொடங்கியதால் “இந்தியன் 2” திரைப்படம் டிராப் என்றே தகவல் வந்தது.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மீண்டும் “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. எனினும் இந்த இடைப்பட்ட காலத்தில் இத்திரைப்படத்தில் நடித்த விவேக், நெடுமுடி வேணு ஆகியோர் உயிரிழந்தனர். கமல்ஹாசனுடன் விவேக் இணைந்து நடித்த முதல் திரைப்படம் இதுதான்.
கடந்த ஆண்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் விவேக், நெடுமுடி வேணு ஆகியோர் நடித்த கதாப்பாத்திரங்களுக்கு வேறு நடிகர்களை படக்குழுவினர் தேர்வு செய்யவுள்ளார்கள் என்று தகவல் வந்தது. ஆனால் அதன் பின் ஷங்கர் ஒரு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவேக், நெடுமுடி வேணு ஆகியோரை நடிக்க வைக்கப்போகிறார் என செய்திகள் வெளிவந்தது. அதாவது வேறு இருவரின் உடலோடு விவேக், நெடுமுடி வேணு ஆகியோரின் முகங்களை பொருத்தி மீதி காட்சிகளை உருவாக்கப்போவதாக கூறினார்கள்.
“இந்தியன் 2” திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். பெரும்பாலும் ஷங்கர் ஏ.ஆர்.ரஹ்மானையே தனது திரைப்படங்களில் பயன்படுத்தி வந்தார். ஆனால் இந்த முறை அனிருத், ஷங்கர் திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதில் இசையமைப்பாளர் அனிருத், இசையமைத்துக்காட்ட அதனை துள்ளலோடு ரசிக்கிறார் இயக்குனர் ஷங்கர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.