ரஜினிகாந்த் தற்போது “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஆகஸ்து மாதம் 10 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் தான் சிறப்பு தோற்றத்தில் தோன்றும் “லால் சலாம்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். “லால் சலாம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் “ஜெயிலர்” திரைப்படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட உள்ளாராம்.
“ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், மோகன் லால், ஜாக்கி செராஃப், விநாயகன், வசந்த் ரவி போன்ற பலரும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இதற்கு முன் நெல்சன் இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் வணிக ரீதியாக நல்ல வசூலை படைத்திருந்தாலும் ரசிகர்களுக்கு திருப்திகரமாக அமையவில்லை. ஆதலால் “ஜெயிலர்” திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அதே போல் ரஜினிகாந்த் இதற்கு முன்பு நடித்த “அண்ணாத்த” திரைப்படம் சரியாக போகவில்லை என்பதால் ரஜினி ரசிகர்களும் “ஜெயிலர்” திரைப்படத்தை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் “லால் சலாம்” திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். சமீபத்தில் இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஏற்று நடிக்கும் மொய்தீன் பாய் கதாப்பாத்திரத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
“லால் சலாம்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் “ஜெய் பீம்” இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு மாஸ் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் சீயான் விக்ரமை வில்லனாக நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.
தா.செ.ஞானவேல் இத்திரைப்படத்தின் கதையை விக்ரமிடம் கூறியிருக்கிறார். விக்ரமிற்கோ இந்த கதை மிகவும் பிடித்துப்போயிருக்கிறது. ஆதலால் விக்ரம் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. சீயான் விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.