தனுஷ் தற்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.
அருண் மாதேஸ்வரன் இதற்கு முன் “ராக்கி”, “சாணி காயிதம்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். இதனை தொடர்ந்து தற்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். “கேப்டன் மில்லர்” திரைப்படம் பிரிட்டிஷ் ஆட்சியில் நடக்கும் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தென்காசி பகுதியில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே தென்காசியில் உள்ள மத்தளம்பாறை பகுதியில் நீர்நிலைக்கு அருகே ஒரு பாலத்தை செட் போட்டு அதில் குண்டு வெடிப்பு நடப்பது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அந்த குண்டு வெடித்ததில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறையின் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதால் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு தற்காலிகமாக தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
எனினும் சில நாட்களிலேயே மிக சீக்கிரம் அனுமதி பெறப்பட்டு “கேப்டன் மில்லர்” படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
இன்று நெல்லையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில் நிருபர் ஒருவர், “நீர்நிலைகள் இருக்கும் இடங்களில் செட் போட்டு குண்டுவெடிப்பு நடப்பது போல் ஷூட்டிங் எடுக்கிறார்கள். இதை பற்றி ஏற்கனவே புகார் தெரிவித்தும் மீண்டும் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் நீர்வளத்துறைக்கும் பங்கு இருக்கிறது. இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என அந்த பிரச்சனையை குறித்து கேள்வி எழுப்பினார்.
அப்போது ஒருவர், “முறையான அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடத்துகிறார்கள்” என்று கூறினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் துரைமுருகன், “அதற்கு அனுமதி அளித்திருக்கவே கூடாது. இது குறித்து தீவிரமாக விசாரித்து தவறு இருக்குமானால் விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார். இதன் மூலம் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.