“விக்ரம்” திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 67 ஆவது திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்ற செய்தி பரவியதை தொடர்ந்து “தளபதி 67” திரைப்படத்தை குறித்த ஆவல் ரசிகர்களிடையே தொற்றிக்கொண்டது. பல மாதங்களாக “தளபதி 67” குறித்த அப்டேட் வெளிவரும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
எனினும் “வாரிசு” திரைப்படம் வெளிவந்த சில நாட்களிலேயே “தளபதி 67”, அதாவது “லியோ” திரைப்படம் குறித்தான அறிவிப்பு வெளிவந்தது. இதனை தொடர்ந்து “லியோ” படக்குழுவினர், இத்திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்தான அப்டேட்டுகளை வெளியிட்டு வந்தனர். த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ போன்ற பலருடைய பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இவ்வளவு பெரிய நட்சத்திரப் பட்டாளமே “லியோ” படத்தில் நடிப்பதாக வெளிவந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கத்தில் காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடந்தது. அதன் பின் தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் மிகவும் விறுவிறுப்பாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 60% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான முத்து பிரதீப் “லியோ” திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக அவரே குறிப்பிட்டிருக்கிறார். முத்து பிரதீப் தொடக்கத்தில் “மெட்ராஸ் சென்டிரல்”, “பரிதாபங்கள்”, “ஒய் பிளட் சேம் பிளட்” ஆகிய யூட்யூப் சேன்னல்களில் பணியாற்றிக்கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து பல கிரிக்கெட் போட்டிகளில் தமிழ் வர்ணனையாளராக திகழ்ந்து வருகிறார்.
மேலும் “மீசைய முறுக்கு”, “வீட்ல விசேஷம்” ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில்தான் தனது டிவிட்டர் பக்கத்தின் Bio-ல் “லியோ” திரைப்படத்தின் பெயரையும் சேர்த்துள்ளார்.
அதே போல் சமீபத்தில் “லியோ” படக்குழுவினர் காஷ்மீர் படப்பிடிப்பு தளத்தில் நடந்தவற்றை BTS விடியோவாக வெளியிட்டிருந்தனர். அதில் முத்து பிரதீப் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.