தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படம்?… திடீரென தயாரிப்பாளர் வெளியிட்ட அறிக்கை….

- Advertisement -

கடந்த வாரம் வெளிவந்த”தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் சர்ச்சைகளை கிளப்பிய திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளிவந்தபோதே எதிர்ப்புகள் கிளம்பத்தொடங்கின. இஸ்லாமிய வெறுப்பை விதைக்கிற திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளதாக கண்டனங்கள் எழுந்தன. அதனை தொடர்ந்து இத்திரைப்படம் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட வேண்டும் என்றும் பல குரல்கள் எழுந்தது. எனினும் இத்திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் இத்திரைப்படம் வெளிவந்த ஒரு நாளிலேயே இத்திரைப்படத்தை திரையரங்குகளில் இருந்து நீக்கிவிட்டனர். தமிழ்நாட்டில் இப்படி இருக்க, வட இந்தியாவில் இத்திரைப்படம் வெளியாகி 30 கோடிகளையும் தாண்டி வசூல் செய்தது.

இந்த நிலையில் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள “ஃபர்ஹானா” திரைப்படத்திற்கும் எதிர்ப்புகள் கிளம்பியது. இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “ஃபர்ஹானா திரைப்படம் அனைத்து ரசிகர்களுக்குமானது. மத உணர்வுகளுக்கு எதிரானது அல்ல. தவறான பார்வை கொண்டவர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் அதில், “ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும் உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல. நல்ல திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கமே தவிர, ஒரு நாளும் எந்த மத உணர்வுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிராகவோ புண்படுத்தும் விதமாகவோ செயல்படுவது அல்ல. மேலும் மனித குலத்திற்கு எதிரான ஒரு செயலை என்றும் எங்கள் கதைகளில் நாங்கள் அனுமதிப்பதில்லை, விரும்புவதுமில்லை” என குறிப்பிட்டிருக்கும் அவர், “இந்தியா போலவே, குறிப்பிட்ட சில வெளிநாடுகளிலும், மத உணர்வுகள் புண்படுவது போன்ற காட்சிகள் ஒரு திரைப்படத்தில் இருந்தால், அந்த படம் தணிக்கையை தாண்டுவது மிகக் கடினம். குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், ஓமன், பக்ரைன், ஐக்கிய அரபு நாடுகள், ஆகிய நாடுகளின் தணிக்கை விதிகள் கடுமையானதாக இருக்கும். ஆனால் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அந்த நாடுகளிலேயே ஃபர்ஹானா திரைப்படம், எந்த வித சிக்கலும் இன்றி தணிக்கை செய்யப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது” எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

“ஃபர்ஹானா” திரைப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் “ஒரு நாள் கூத்து”, “மான்ஸ்டர்” ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்