விஜய் நடிக்கும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வந்தது. அப்பகுதியில் பல காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
தற்போது வரை கிட்டத்தட்ட 60% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியாக இன்னும் 5 மாதங்களே இருப்பதால் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
“லியோ” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் அத்திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மேத்யூ போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.
இதில் அர்ஜூன் ஒரு டெரரான வில்லனாக நடித்து வருகிறாராம். மேலும் சமீபத்தில்தான் அர்ஜூன்-விஜய் ஆகியோர் மோதிக்கொள்ளும் ஒரு பயங்கரமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளதாம்.
இத்திரைப்படம் கடந்த 2005 ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான “ஏ ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ்” என்ற திரைப்படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது. இதில் எட் ஹாரிஸ் ஏற்று நடித்த கார்ல் ஃபகோர்டி என்ற கதாப்பாத்தில்தான் “லியோ” படத்தில் அர்ஜூன் நடித்து வருகிறார் என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.
இந்த நிலையில் “லியோ” திரைப்படத்தை குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை படமாக்குவதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஒரு மிக பிரம்மாண்டமான விமான நிலையத்திற்கான செட் போடப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் நிறைவடையவுள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.