ஜெய் தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து வந்தாலும் சமீப காலமாக அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் சில சரியாக ஓடுவது இல்லை. சமீபத்தில் “பலூன்”, “ஜருகண்டி”, “கேப்மாரி”, “வீரபாண்டியபுரம்”, “குற்றம் குற்றமே”, “பட்டாம் பூச்சி”, “காஃபி காத் காதல்” போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
ஆனால் இதில் ஒரு திரைப்படம் கூட சரியாக போகவில்லை. இதில் “பட்டாம் பூச்சி” திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான சைக்கோ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெய். ஆனாலும் அத்திரைப்படம் எடுபடவில்லை. இதில் “வீரபாண்டியபுரம்” திரைப்படத்தில் ஜெய் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய் தற்போது “தீரா காதல்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் ஜெய்யுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், சிவத்தா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை ரோஹின் வெங்கடேசன் இயக்கியிருந்தார். இவர் இதற்கு முன் “அதே கண்கள்”, “பெட்ரோமாக்ஸ்” ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். “தீரா காதல்’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் வருகிற 26 ஆம் தேதி வெளிவரவுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் “தீரா காதல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவத்தா, இயக்குனர் ரோஹின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது ஜெய், இத்திரைப்படத்தை குறித்த பல விஷயங்களை கலகலப்பாக பகிர்ந்துகொண்டார்.
அப்போது ஜெய், “இயக்குனர் ரோஹின் அடுத்ததாக அஜித் அண்ணனை வைத்து படம் எடுக்கப்போகிறார் என செய்தித்தாளில் படித்தேன். அந்த படத்தில் எனக்கு வில்லன் வாய்ப்பாவது கொடுங்களேன் ப்ளீஸ்” என கலகலப்பாக கூறினார். ஜெய் அப்படி பேசியபோது இயக்குனர் ரோஹின் தனது தலையை குனிந்துகொண்டு சிரித்தார்.
ஜெய் சமீப காலமாக நடித்த திரைப்படங்கள் எதுவும் சரியாக போகவில்லை என்பதால் இந்த “தீரா காதல்” திரைப்படம் ஒரு வித்தியாசமான காதல் திரைப்படமாக அமையும் எனவும் ஜெய்க்கு ஒரு வெற்றித் திரைப்படமாக அமையும் எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.