சன் டிவி, விஜய் டிவி போன்ற நிறுவனங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கியவர் ஜேம்ஸ் வசந்தன். மிகவும் அழகான தமிழ் உச்சரிப்பை வெளிப்படுத்தும் குரல் திறமை உள்ள ஜேம்ஸ் வசந்தன் இசையின் மீது மிகப்பிரியமாக இருந்தார். 400க்கும் மேற்பட்ட கிருஸ்துவ பாடல்களை இசையமைத்த ஜேம்ஸ் வசந்தன், சசிக்குமார் இயக்கிய “சுப்ரமணியபுரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
தனது முதல் திரைப்படத்திலேயே அனைத்து பாடல்களிலும் ஹிட் கொடுத்து பல இசை ரசிகர்களை கவர்ந்தார் ஜேம்ஸ் வசந்தன். அத்திரைப்படத்தில் இடம்பெற்ற “கண்கள் இரண்டால்” பாடல் இன்றும் மிகப் பிரபலமான பாடலாக இருக்கிறது. அதனை தொடர்ந்து “நாணயம்”, “பசங்க”, “ஈசன்” போன்ற பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய ஜேம்ஸ் வசந்தன், “வானவில் வாழ்க்கை” என்ற திரைப்படத்தை இயக்கினார். தற்போது “ஓ அந்த நாட்கள்” என்ற திரைப்படத்தை இயக்கி இசையமைத்து வருகிறார்.
ஜேம்ஸ் வசந்தன் சமீப காலமாக தனது சமூக வலைத்தளத்திலும் பேட்டிகளிலும் இளையராஜாவை குறித்து மிகவும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால் பல சர்ச்சைகளும் எழுந்தன. இந்த நிலையில் அனிருத்தை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஜேம்ஸ் வசந்தன், “அனிருத் இசை இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப தாம் தூம் என இருக்கிறது. ஆனால் அதில் மட்டும்தான் அவர் கவனம் செலுத்தி வருகிறார். வெறும் துள்ளலான பாடல்களை எவ்வளவு நாளைக்குத்தான் கேட்கமுடியும். பிரியாணியை மூன்று வேளைக்கு எத்தனை நாட்கள்தான் சாப்பிடமுடியும்.” என கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
மேலும் பேசிய அவர், “தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் விரும்புவதால்தான் அனிருத் இப்படி அதிரடியான பாடல்களையே கொடுக்கிறார். அந்த காலத்தில் இருந்தே சினிமாவில் இப்படித்தான் நடந்து வருகிறது. அவரது ரசிகர்கள் அவரது இசையை பாராட்டினால் அவர் ஏன் அவரது ஸ்டைலை மாற்றிக்கொள்ள போகிறார். அப்படியேதான் தொடரும். இந்த போக்கால் மெலோடி பாடல்களே காணாமல் போய்விட்டது” எனவும் அவர் கூறியிருக்கிறார்.