தனது முதல் திரைப்படமான “பீட்சா” திரைப்படத்திலேயே தமிழ் சினிமா உலகை திரும்பி பார்க்க வைத்தவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் கலைஞர் தொலைக்காட்சியின் “நாளைய இயக்குனர்” நிகழ்ச்சியின் மூலம் சினிமா ரசிகர்களிடையே அறிமுகமானவர். அதனை தொடர்ந்து “பீட்சா” திரைப்படத்தின் மூலம் தனித்துவ இயக்குனர் என பெயர் பெற்ற கார்த்திக் சுப்புராஜ், “ஜிகர்தண்டா” திரைப்படத்தின் மூலம் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.
மதுரையை அடிப்படையாக வைத்த பல கேங்க்ஸ்டர் திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், அப்படி ஒரு வித்தியாசமான திரைக்கதை அம்சத்தோடு அதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு திரைப்படமும் வெளிவரவில்லை என கூறலாம். குறிப்பாக அதில் கேங்கஸ்டராக நடித்திருந்த பாபி சிம்ஹா மிகவும் டெரரான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
“ஜிகர்தண்டா” திரைப்படத்தை தொடர்ந்து “இறைவி”, “மெர்குரி”, “பேட்ட”, “ஜகமே தந்திரம்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், சமீபத்தில் சீயான் விக்ரமை வைத்து “மகான்” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்திற்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு “ஜிகர்தண்டா” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுக்கள் அடிபட்டன. அதனை தொடர்ந்து அந்த தகவலை உறுதி செய்யும் வகையில் அதிகாரப்பூர்வமாக படக்குழு அப்டேட் வெளியிட்டது. இத்திரைப்படத்திற்கு “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தை குறித்து ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளிவரவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படத்தோடு சிவகார்த்திகேயனின் “அயலான்”, தனுஷின் “கேப்டன் மில்லர்” போன்ற திரைப்படங்களும் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.