சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “கங்குவா”. இத்திரைப்படம் 10 மொழிகளில் உருவாகி வருகிறது. ஒரு வரலாற்று அதிபுனைவு திரைப்படமாக இத்திரைப்படத்தை படமாக்கி வருகின்றனர்.
இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திசா படானி நடித்து வருகிறார். சூர்யாவின் கெரியரிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வருகிறது இத்திரைப்படம்.
சிறுத்தை சிவா, இதற்கு முன் சென்டிமென்ட் கலந்த ஆக்சன் திரைப்படங்களை இயக்கி வந்தார். ஆனால் முதன்முதலாக ஒரு பிரம்மாண்ட வரலாற்று புனைவு திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஆதலால் ரசிகர்கள், “கங்குவா” திரைப்படத்திற்கு மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அதே போல் சூர்யாவும் முதன்முதலாக இது போன்ற ஒரு கதையில் நடிக்கிறார் என்பதால் மொத்த தமிழ் சினிமாவும் இத்திரைப்படத்தின் வெளியீட்டை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
சூர்யா எப்போதுமே தனது உடலை கட்டுக்கோப்பாக மெயின்டெயின் செய்து வருபவர். “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தில் இருந்து தனது கட்டுமஸ்தான உடலை காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பல இளைஞர்கள் சூர்யாவை முன்னோடியாக கொண்டு ஜிம்மிற்கு செல்லும் காலகட்டம் கூட வந்தது.
இவ்வாறு இருக்க, சமீபத்தில் சூர்யா நன்றாக வெயிட் போட்டுவிட்டார் என்று பல புகைப்படங்கள் வைரல் ஆகின. எப்போதும் தனது உடலை கட்டுக்கோப்பாக காத்துக்கொண்டு வரும் சூர்யா, இப்படி திடீரென வெயிட் போட்டுவிட்டாரே என ரசிகர்கள் கவலைக்கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக படக்குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதாவது சூர்யா ஜிம்மில் தனது மெருகேற்றப்பட்ட உடலை வெளிகாட்டியவாறு உடற்பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
சூர்யா “கங்குவா” திரைப்படத்திற்காக இவ்வாறு தனது உடலை மெருகேற்றிவருவதாக கூறப்படுகிறது. ஆதலால் “கங்குவா: திரைப்படத்திற்காக ரசிகர்களின் எதிர்பார்ப்பு தற்போது எகிறியுள்ளது.