தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தற்போது பிசியான நடிகையாக திகழ்ந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இவர் தொடக்கத்தில் பல மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். அதனை தொடர்ந்து தமிழில் “இது என்ன மாயம்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன் பின் “ரஜினிமுருகன்”, “ரெமோ”, “பைரவா” போன்ற திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், தமிழ் இளைஞர்களின் நெஞ்சங்களில் கனவுக்கன்னியாக குடிபுகுந்தார்.
இதனை தொடர்ந்து தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், “மகாநடி” திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பின் வேறு பரிமாணத்தை காட்டினார். இத்திரைப்படத்தில் சாவித்திரியாக மிகவும் கச்சிதமாக பொருந்திய கீர்த்தி சுரேஷ், இத்திரைப்படத்திற்காக தேசிய விருதையும் வென்றார்.
இதனிடையே கீர்த்தி சுரேஷ் சிறு வயதில் இருந்தே ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரைத்தான் அவர் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் எனவும் செய்திகள் பரவியது. இதனை தொடர்ந்து சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு ஆடவருடன் தான் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில் இருவரும் ஒரே நிற ஆடையை அணிந்திருந்தனர். மேலும் அதில் “பிறந்த நாள் வாழ்த்துகள்” என தெரிவித்திருந்தார்.
இந்த புகைப்படம் வெளியானதை தொடர்ந்து பலரும் கீர்த்தி சுரேஷின் காதலர் இவர்தான் என இணையத்தில் பரவ தொடங்கியது. ஆனால் அந்த நபர் கீர்த்தி சுரேஷின் நெருங்கிய நண்பர்தானே தவிர காதலர் இல்லை எனவும் அவரது பெயர் ஃபர்ஹான் பின் லியாகத் எனவும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் இத்தகவல் வதந்தி எனவும் தெரியவந்துள்ளது.
கீர்த்தி சுரேஷ் நடித்த “மாமன்னன்” திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், தற்போது தமிழில் “சைரன்”, “ரகு தாத்தா”, “ரிவால்வர் ரீத்தா” ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.