“ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் பல மாதங்களுக்கு முன் லைகா நிறுவனம் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. மேலும் அதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தி பலரின் ஆர்வத்தையும் தூண்டிவிட்டது.
இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் இத்திரைப்படத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. அத்திரைப்படத்திற்கு “லால் சலாம்” என்று டைட்டில் வைக்கப்பட்டது. இத்திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக உருவாக்கப்படும் திரைப்படம் எனவும் கூறப்பட்டது. இதனை உறுதிபடுத்தும் வகையில் “லால் சலாம்” திரைப்படத்தின் போஸ்டரும் அமைந்திருந்தது.
அதே போல் “லால் சலாம்” திரைப்படத்தில் ரஜினி இஸ்லாமிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளிவந்தது. இந்த நிலையில் இன்று “லால் சலாம்” திரைப்படத்தில் ரஜினிகாந்த் கதாப்பாத்திரத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்துள்ளது. இதில் மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்த போஸ்டரில் ஒரு கலவரத்தின் பின்னணியில் ரஜினிகாந்த் ஸ்டைலாக நடந்து வருகிறார். மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் அதிரடியான கதாப்பாத்திரமாக மொய்தீன் பாய் கதாப்பாத்திரம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“லால் சலாம்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், “ஜெய் பீம்” இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வலம் வருகின்றன.