ரஜினிகாந்த் தற்போது “லால் சலாம்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ரஜினிகாந்த் இடம்பெற்றுள்ள காட்சிகள் அனைத்தும் மும்பை பகுதியில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி படக்குழுவினர் மும்பையில் ரஜினிகாந்தை வைத்து படமாக்கி வந்தனர். ஆனால் இடையில் படப்பிடிப்பில் பல குளறுபடிகள் நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 5 நாட்களாக ரஜினிகாந்தின் காட்சிகளை படமாக்கவே இல்லையாம். 5 நாட்கள் ரஜினிகாந்த் வெறுமனே உட்கார்ந்திருந்தாராம். இதனால் ரஜினிகாந்த் ஃப்ளைட் ஏறி சென்னை புறப்பட்டு வந்துவிட்டார் என கூறப்படுகிறது. ஆதலால் “லால் சலாம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடருமா? என்ற கேள்வியும் எழுந்து வந்தது.
எனினும் “லால் சலாம்” திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருவதால் நிச்சயமாக ரஜினிகாந்த் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் “லால் சலாம்” திரைப்படத்தை குறித்த ஒரு முக்கிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
ரஜினிகாந்த் தற்போது மும்பையில் இருந்து சென்னை வந்திருக்கும் நிலையில் சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்திவிடலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம். சிம்பு நடிப்பில் வெளிவந்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தில் பல காட்சிகள் மும்பை பகுதிகளில் நடப்பது போல் படமாக்கப்பட்டது. ஆனால் அந்த காட்சிகள் மும்பையில் எடுக்கப்படவில்லையாம். அதில் பெரும்பான்மையான காட்சிகள் சென்னையில் டி.ராஜேந்தருக்கு சொந்தமான சிம்பு கார்டன்ஸில் மும்பை நகர் போன்றே செட் போடப்பட்டு படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது அந்த செட் அப்படியே இருக்கிறதாம். இந்த நிலையில் அந்த செட்டை பயன்படுத்தி “லால் சலாம்” திரைப்படத்தில் ரஜினிகாந்த் இடம்பெறும் காட்சிகளை படமாக்கிவிடலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
“லால் சலாம்” திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.