கடந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கி வெளிவந்த “லவ் டூடே” திரைப்படம் மாஸ் ஹிட் அடித்தது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 100 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இன்றைய இளைஞர்களின் விருப்பத்திற்குரிய திரைப்படமாக அமைந்தது “லவ் டூடே” திரைப்படம். சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் பல விஷயங்களை எல்லாம் திரைக்கதையில் சேர்த்து மிகவும் சுவாரஸ்யமாக இத்திரைப்படத்தை கொண்டு சென்றிருந்தார் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன்.
இத்திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். அழகு பதுமையாகவும் கியூட்டாகவும் நடித்து இளைஞர்களின் மனதை கவர்ந்திழுத்தார். இந்த நிலையில் “லவ் டூடே” திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ளது.
“லவ் டூடே” திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகரான ஆமீர் கானின் மகன் ஜுனைத் கான் ஹீரோவாகவும், ஸ்ரீதேவியின் இளைய மகளும் ஜான்வி கபூரின் தங்கையுமான குஷி கபூர் ஹீரோயினாகவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. “லவ் டூடே” திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கை அத்வைத் சந்தன் என்பவர் இயக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆமீர் கானின் மகனான ஜுனைத் கான் இதற்கு முன் “மகாராஜ்” என்ற திரைப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். ஒரு வேளை “லவ் டூடே” ரீமேக்கில் நடிப்பது உறுதியானால் இது அவருக்கு இரண்டாவது திரைப்படமாகும். குஷி கபூர் இத்திரைப்படத்தில் நடிப்பது உறுதியானால் அது இவருக்கு முதல் திரைப்படமாகும். எனினும் “லவ் டூடே” திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை. ஆகினும் இத்தகவல் 90% உண்மைக்கு நெருக்கமான தகவல்தான் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.