விஜய் நடித்து வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியான “ஏ ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ்” என்ற திரைப்படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த உண்மையான தகவல் எதுவும் தெரியவில்லை.
“லியோ” திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தை அட்லி இயக்குவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அத்திரைப்படத்தை அட்லி இயக்கவில்லை எனவும் தெலுங்கு இயக்குனரான கோபிசந்த் மல்லினேனி இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஏற்கனவே விஜய்யின் “வாரிசு” திரைப்படத்தை தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்கியிருந்தார். ஆதலால் மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனருடன் விஜய் இணையவுள்ளாரா? என பல ரசிகர்களும் கவலையில் மூழ்கினர்.
ஆனால் அதனை தொடர்ந்து “தளபதி 68” திரைப்படத்தை தற்போது வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. இது குறித்த உண்மை தகவல் தெரியவில்லை. எனினும் விஜய் ரசிகர்கள் இந்த தகவலால் மிகவும் உற்சாகத்தோடு இருக்கிறார்கள்.
“தளபதி 68” திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் 100 ஆவது திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வேறு விதமாக ஒரு தகவல் வெளிவருகிறது. அதாவது “தளபதி 68” திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் விஜய்யை வைத்து “பிகில்” திரைப்படத்தை தயாரித்திருந்தனர். மேலும் கடந்த வருடம் வெளியாகி மெகா ஹிட் அடித்த “லவ் டூடே” திரைப்படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம்தான் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் விஜய்யின் கெரியரில் முக்கிய திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்த “பூவே உனக்காக” திரைப்படத்தை ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.