“மாவீரன்” திரைப்படம் ஆகஸ்து மாதம் 11 ஆம் தேதி வெளிவரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் “ஜெயிலர்” திரைப்படம் திடீரென ஆகஸ்து 10 ஆம் தேதி வெளிவரும் என அறிவிப்பு வெளிவந்தது. இதனை தொடர்ந்து “மாவீரன்” திரைப்படம் தற்போது ஜூலை மாதம் 14 ஆம் தேதிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் ஏன் அவ்வாறு சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக “ஜெயிலர்” திரைப்படத்தை இறக்க திட்டம் தீட்டியது? என்பது குறித்தான ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்ததாம். அதற்கான அட்வான்ஸ் தொகையாக சில கோடிகள் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் சிவகார்த்திகேயனை அத்திரைப்படத்தில் நடிக்க வைக்கலாம் என முடிவு செய்து சிவகார்த்திகேயனை அணுகி அவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸாக தந்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் முத்தையாவை சிவகார்த்திகேயனிடம் கதை கூறுமாறு அனுப்பியதாம். ஆனால் சிவகார்த்திகேயன் அவரை தவிர்த்துக்கொண்டே வந்திருக்கிறார்.
இதனிடையே முத்தையா ஆர்யாவை வைத்து “காதர்பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்” திரைப்படத்தை இயக்க சென்றுவிட்டாராம். “காதர்பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்” திரைப்படத்திற்கு பிறகாவது முத்தையாவை அழைத்து தனது கம்பெனிக்கு படம் பண்ண சொல்லலாம் என்று நினைத்தபோது, முத்தையா தனது சம்பளத்தை அதிகப்படுத்திவிட்டார் என்று சன் பிக்சர்ஸுக்கு தெரியவந்திருக்கிறது.
சிவகார்த்திகேயன் கதை கேட்காததனால்தான் தாமதம் ஆகியது, இல்லை என்றால் அன்றே இந்த புராஜெக்ட்டை முடித்திருக்கலாம் என்று சிவகார்த்திகேயனின் மீது சன் பிக்சர்ஸ் வெறுப்பாக இருந்ததாம். ஆதலால்தான் சிவகார்த்திகேயனுக்கு செக் வைப்பது போல் தான் தயாரித்த “ஜெயிலர்” திரைப்படத்தை “மாவீரன்” திரைப்படம் வெளியாகவிருக்கும் முந்தைய நாளில் வெளிவருமாறு அறிவித்ததாம். எனினும் “மாவீரன்” திரைப்படம் ஜூலை மாதம் 14 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுவிட்டது.