அஜித்குமார் “துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கும் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இதற்கு இடைப்பட்ட நாட்களில் அஜித்குமார் தனது கனவுப்பயணமான பைக் டூரின் ஒரு பகுதியை முடித்துவிட்டார்.
அதாவது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் சுற்றிவிட்டு மேலும் பூடான், நேபாள் ஆகிய நாடுகளையும் சுற்றிக்கொண்டு மீண்டும் சென்னை திரும்பிவிட்டார். “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முடிவடைகிறது. அதன் பின் தனது கனவுப்பயணத்தை மீண்டும் தொடங்கவுள்ளார் அஜித். நவம்பர் மாதம் அவர் முதற்கட்டமாக ஆஸ்திரேலியா நாட்டில் பைக் டூர் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதன் பின் ஒன்றரை வருடங்கள் இந்தியாவிற்கு திரும்ப மாட்டார் எனவும் கூறப்படுகிறது.
மகிழ்திருமேனி, இதற்கு முன் இயக்கிய “தடையறத் தாக்க”, “மீகாமன்”, “தடம்”, “கலகத்தலைவன்” ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களாகும். இந்த நிலையில் தற்போது மகிழ்திருமேனி-சிம்பு இணைந்த புராஜெக்ட்டை குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது மகிழ் திருமேனி “கலகத்தலைவன்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதாக இருந்ததாம். இத்திரைப்படம் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்ததாம். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டபோதுதான் மகிழ் திருமேனிக்கு லைகாவிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. “ஏகே 62” புராஜெக்ட் என்று தெரியவந்ததும் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் விஷயத்தை கூறியுள்ளார்.
அதற்கு ஏஜிஎஸ் நிறுவனம், “பொறுமையாக அஜித் படத்தை இயக்கிவிட்டு வாருங்கள். அதன் பின் சிம்புவின் புராஜெக்ட்டை எடுக்கலாம்” என்று கூறி அனுப்பி வைத்தார்களாம். இவ்வாறு அஜித்தால் சிம்புவின் புராஜெக்ட் தள்ளிப்போயிருக்கிறது. இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் தனது வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார். எனினும் சிம்பு தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.