நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக கலைஞராக திகழ்ந்து வந்த மனோபாலா, கடந்த 3 ஆம் தேதி கல்லீரல் பிரச்சனை காரணமாக சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். அவர் நம்மை விட்டு பிரிந்து 5 நாட்களுக்கும் மேல் ஆகியும் இப்போதும் இணையத்தில் பலரும் அவரின் நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர்.
மனோபாலா தனது இளம் வயதில் இருந்தே புகைப்பிடிக்கும் வழக்கம் உடையவர். ஒரு நாளுக்கு 50க்கும் மேற்பட்ட சிகரெட்டுகளை ஊதித்தள்ளுவாராம். எனினும் ஒரு கட்டத்தில் புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்தி இருக்கிறார். இது குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியபோது, “அப்போதெல்லாம் சிகரெட் பிடிக்கவில்லை என்றாலே கை எல்லாம் நடுக்கம் எடுத்துவிடும்” என கூறியிருந்தார்.
சினிமாத்துறையில் தொழில் ரீதியான எதிரிகள் அனைத்து கலைஞர்களுக்கும் இருப்பது வழக்கம்தான். ஆனால் மனோபாலா அதில் விதிவிலக்காக இருந்தார். சினிமாத்துறையை சேர்ந்த முக்கியமானவர்கள் அனைவரும் அவருடன் நட்பாகவே இருந்தனர். எப்போதும் நகைச்சுவையாகவே பேசும் இயல்புகொண்டவர் மனோபாலா. சினிமாத்துறையினர் மட்டுமல்லாது ரசிகர்களும் அவர் மீது அன்பு வைத்திருந்தனர்.
இவ்வாறு எப்போதும் நமது மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் மனோபாலா, இந்த மண்ணை விட்டு பிரிந்தது பல ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் தற்போது அவரது யூட்யூப் சேன்னலான “மனோபாலா வேஸ்ட் பேப்பர்” என்ற சேன்னலில் அவர் இறப்பதற்கு முன்னான கடைசி தருணத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளனர் அவரது குடும்பத்தினர்.
எப்போதும் கலகலப்பாக இருக்கும் மனோபாலா, அந்த வீடியோவில் பேசக்கூட முடியாமல் அமர்ந்திருக்கிறார். அவரை கலகலப்பாக வைத்துக்கொள்ள அவரது குடும்பத்தினர் முயற்சி செய்கின்றனர். ஆனால் மனோபாலா அவர்களை வெறுமனே பார்த்துக்கொண்டே மட்டும் இருக்கிறார்.
அந்த வீடியோவில் மனோபாலாவின் மகன் ஒரு பாடலை பாடுகிறார். அந்த பாடல்தான் மனோபாலா கேட்ட கடைசி பாடல் ஆகும். இந்த வீடியோ ரசிகர்களை கண்ணீரை வரவழைத்துள்ளது.