நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக கலைஞராக திகழ்ந்து வந்த மனோபாலா, கடந்த 3 ஆம் தேதி கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். மனோபாலாவின் இறப்பிற்கு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். அவர் நம்மை விட்டு பிரிந்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகியும் இப்போதும் இணையத்தில் அவரை குறித்த நினைவுகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்தளவுக்கு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் மனோபாலா.
மனோபாலா தொடக்கத்தில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதனை தொடர்ந்து “ஆகாய கங்கை” என்ற திரைப்படத்தை இயக்கினார் மனோபாலா. ஆனால் அத்திரைப்படம் சரியாக ஓடவில்லை. ஆதலால் மிகவும் மன உலைச்சலுக்கு ஆளானார்.
தனது முதல் திரைப்படமே இப்படி தோல்வியடைந்தது அவரை மிகப்பெரிய சோகத்திற்குள்ளாக்கியது. அதன் பின் நடிகர் மைக் மோகன் அவருக்கு உதவ முன்வர, “பிள்ளை நிலா” என்ற திரைப்படத்தை இயக்கினார். அத்திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து “சிறைப்பறவை”, “ஊர்க்காவலன்”, “என் புருஷன்தான் எனக்கு மட்டுந்தான்” ஆகிய பல ஹிட் திரைப்படங்களை இயக்கினார். அதே போல் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் காமெடி வேடங்களிலும் நடித்துள்ளார்.
மனோபாலா தமிழ் சினிமாவில் பிசியான இயக்குனராக வலம் வந்த காலகட்டத்தில் தொடர்ச்சியாக புகைப்பிடிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தார். இது குறித்து மனோபாலாவே ஒரு பேட்டியில், தனக்கு சிகரெட் பிடிக்கவில்லை என்றால் கைநடுக்கம் ஏற்பட்டுவிடும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மனோபாலா குறித்து ஒரு அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மனோபாலா பிசியான இயக்குனராக வலம் வந்த காலகட்டத்தில் ஒரு நாளுக்கு 100க்கும் மேற்பட்ட சிகரெட்டுகளை ஊதித்தள்ளுவாராம். ஒரு கட்டத்தில் உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவர், “இனி ஒரு சிகரெட் அடித்தாலும் உயிர்போய்விடும்” என கூறியிருக்கிறார். அதன் பிறகுதான் சிகரெட் பிடிப்பதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாராம். மேலும் பலரிடமும் “சிகரெட் பிடிக்காதீங்க” என அறிவுரையும் கூறத்தொடங்கினாராம்.