நயன்தாரா தற்போது தென்னிந்திய சினிமா உலகின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல ஆண்டுகளாக கோலோச்சி வந்த நயன்தாரா தற்போது பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் “ஜவான்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நயன்தாரா தற்போது தமிழில் “இறைவன்”, “டெஸ்ட்” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் தனது 75 ஆவது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார். இவ்வாறு படு பிசியாக வலம் வரும் நயன்தாரா தற்போது சென்னையில் ஒரு பழமையான திரையரங்கை விலைக்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் 1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திரையரங்கம் அகஸ்தியா. அந்த காலகட்டத்தில் அகஸ்தியா சென்னையின் ஒரே ஒரு 70 MM திரையரங்கமாக திகழ்ந்து வந்தது. கே.பாலச்சந்தரின் “பாமா விஜயம்” திரைப்படம்தான் இத்திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் திரைப்படம். மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் பல வந்த பிறகும் கூட அகஸ்தியா திரையரங்கம் தனது ஓட்டத்தை நிறுத்திவிடவில்லை.
ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் பல திரையரங்குகள் மூடப்பட்டன. அதில் அகஸ்தியா திரையரங்கமும் ஒன்று. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களின் விருப்பமான திரையரங்கமாக இருந்த அகஸ்தியா திரையரங்கம் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூடப்பட்டது அப்பகுதி மக்களை கவலையில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா தற்போது அகஸ்தியா திரையரங்கத்தை விலைக்கு வாங்கியுள்ளார் எனவும், அதனை புதுப்பித்து மீண்டும் திறக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. இந்த செய்தி தற்போது இணையத்தில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை மகிழ்வித்த திரையரங்கத்தை நயன்தாரா விலைக்கு வாங்கியுள்ளது அப்பகுதி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.