நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் செய்துகொண்டனர். அதனை தொடர்ந்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக இருவரும் அறிவித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை எழுப்பியது.
இந்திய சட்டப்படி குறைந்த பட்சம் ஒரு ஆண்டாவது நிறைவடைந்தும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத தம்பதியினர்தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இந்த சட்டத்தை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் மீறியுள்ளனர் எனவும் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இது குறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் மீது வழக்கும் பதியப்பட்டு அதற்கான விசாரணையும் நடந்தது. எனினும் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்துகொண்டதாக ஒரு தகவலும் வெளிவந்தது.
இதனை தொடர்ந்து நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களின் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தைவிக் என் சிவன் என பெயர் வைத்தனர். இந்த பெயர்களை ஒரு சிலர் இணையத்தில் கேலி செய்தும் வந்தனர்.
அதனை தொடர்ந்து நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் , விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் நயன்தாரா குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, “உலகின் சிறந்த தாய்க்கு அன்னையர் தின வாழ்த்துகள்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து சிலர் அப்பதிவில், “குழந்தையை 9 மாதங்கள் கருவில் சுமந்து பெற்றெடுத்தால்தான் அது தாய்மை” என்பது போல் கம்மெண்ட் செய்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுப்பது போல் நயன்தாரா ரசிகர்கள், “குழந்தையை வயிற்றில் சுமந்து பெற்றெடுத்தால் மட்டும் தாய் ஆகிவிடமுடியுமா? அந்த குழந்தையை நாம் நல்ல முறையில் மிகவும் அன்போடு வளர்ப்பதில்தான் தாய்மை உள்ளது” என அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். எனினும் நயன்தாராவின் அன்னையர் தின புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.