நெல்சன் தற்போது ரஜினிகாந்தை வைத்து “ஜெயிலர்” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி செராஃப், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு போன்ற பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது.
நெல்சன் இதற்கு முன் இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் வணிக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் அத்திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை. மேலும் அத்திரைப்படத்தின் பல காட்சிகள் ரசிகர்களால் கேலிக்குள்ளக்கப்பட்டன.
ஆதலால் “ஜெயிலர்” திரைப்படத்தின் மூலம் வெற்றியை கொடுக்கவேண்டிய நிலையில் நெல்சன் இருக்கிறார். இத்திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 10 ஆம் தேதி வெளிவரவுள்ளது. ரஜினிகாந்த் இதற்கு முன்பு நடித்த “அண்ணாத்த” திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை என்பதால் ரஜினி ரசிகர்களும் இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ஆவலோடு காத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற கதாப்பாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். மிகவும் வித்தியாசமான கதாப்பாத்திரம் என்பதால் ரசிகர்ளிடையே எக்ஸ்பெக்டேஷன் எகிறியுள்ளது.
இந்த நிலையில் தற்போது நெல்சன் இயக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது நெல்சன், “ஜெயிலர்” திரைப்படத்தை தொடர்ந்து தனுஷை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.
தனுஷ் தற்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதன் பின் தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இத்திரைப்படங்களுக்கு பின் தனுஷ், நெல்சனுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.