“ஜெயிலர்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், “லால் சலாம்” திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமிய கதாப்பாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார்.
“லால் சலாம்” திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. சமீபத்தில் கூட இத்திரைப்படத்தில் ரஜினி ஏற்று நடிக்கும் மொய்தீன் பாய் கதாப்பாத்திரத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது.
இந்த ஃபர்ஸ்ட் லுக் பலரையும் கவர்ந்திருந்தாலும் ஒரு சிலர் இதனை இணையத்தில் கேலி செய்தும் வந்தனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் ஹிந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான “கை போ சே” என்ற திரைப்படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது.
“லால் சலாம்” திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்த நிலையில் தற்போது இத்திரைப்படம் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருவதாக நாம் ஏற்கனவே பார்த்திருந்தோம். இதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டபோது 5 நாட்கள் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவே இல்லையாம். அதாவது 5 நாட்கள் ரஜினிகாந்த் சும்மாவே இருந்தாராம். இதனால் கடுப்பான ரஜினிகாந்த், மும்பையில் இருந்து உடனே விமானத்தில் ஏறி சென்னைக்கு பறந்து வந்துவிட்டாராம். இவ்வாறு ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் “லால் சலாம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு “ஜெயிலர்” திரைப்படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபடவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது “லால் சலாம்” படப்பிடிப்பில் நடந்த குழப்பத்தால் “ஜெயிலர்” படத்திற்காக ரஜினிகாந்த் பேசவேண்டிய டப்பிங் பணிகள் தள்ளிப்போக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.