லோகேஷ் கனகராஜ் தற்போது இந்தியாவின் மிக முக்கிய இயக்குனராக திகழ்ந்து வருகிறார். அவரது திரைப்படங்களுக்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் குவிந்துவிடுகிறது. அந்தளவுக்கு சினிமா ரசிகர்களிடையே ஒரு ஸ்டார் இயக்குனராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக இந்திய சினிமா வரலாற்றிலேயே ஹாலிவுட்டை போல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற டிரெண்டை முதலில் தொடங்கியவர் லோகேஷ் கனகராஜாகத்தான் இருப்பார்.
லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்த ஒன்றே. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ், “லியோ” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தின் 171 ஆவது திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 10 ஆம் தேதி வெளிவரவுள்ளது. “ஜெயிலர்” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது “லால் சலாம்” திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
“லால் சலாம்” திரைப்படத்தை தொடர்ந்து “ஜெய் பீம்” இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதில் ரஜினிக்கு வில்லனாக விக்ரமை நடிக்க வைக்கலாம் என பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. “ஜெய் பீம்” திரைப்படம் போலவே ஒரு சமூக கருத்துடைய திரைப்படமாக இத்திரைப்படம் அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் மிஷ்கின், “லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளார்” என்று கூறியிருக்கிறாராம். இதன் மூலம் லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி ஓரளவு உறுதியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இயக்குனர் மிஷ்கின் “லியோ” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.