“ஜெயிலர்” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் “லால் சலாம்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்களை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். அப்புகைப்படங்களில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இடம்பெற்றிருந்தார். இதன் மூலம் அவர் இத்திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
“லால் சலாம்” திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால்-விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்து வருகிறார்கள். சமீபத்தில் இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஏற்று நடிக்கும் மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பலரும் கொண்டாடி வந்தனர். ஒரு சிலர் அந்த போஸ்டரை கேலி செய்தும் வந்தனர். எனினும் ரஜினிகாந்த் ஒரு இஸ்லாமிய கதாப்பாத்திரத்தில் நடிப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
“லால் சலாம்” திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு மீண்டும் “ஜெயிலர்” படக்குழுவுடன் இணையவுள்ளாராம் ரஜினிகாந்த். அதாவது “ஜெயிலர்” திரைப்படத்தில் அவர் நடித்த காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை மேற்கொள்ளப்போகிறாராம். இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் “ஜெய் பீம்” இயக்குனர் தா.செ.ஞானவேலுடன் கைக்கோர்க்கவுள்ளார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த்-தா.செ.ஞானவேல் இணையும் திரைப்படம் குறித்தான ஒரு சூடான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறதாம்.
இத்திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைக்க சீயான் விக்ரமிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு மிகப் பெரிய சம்பளத்தை பேசியுள்ளதாகவும் தகவல் வெளிவருகிறது. ஆதலால் சீயான் விக்ரம், வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.