ரஜினிகாந்த் “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது “லால் சலாம்” திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். “லால் சலாம்” திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க, விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் இத்திரைப்படத்தில் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.
இத்திரைப்படம் ஹிந்தியில் வெளியான “கை போ சே” திரைப்படத்தின் தழுவல் என கூறப்படுகிறது. அதாவது “கை போ சே” திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான திரைப்படம். மூன்று நண்பர்களுக்கு இடையே மதம் ஒரு பெரிய எதிரியாய் குறுக்கே வர, மதவெறியால் தடம் மாறிப்போகும் நண்பனின் கதைதான் “கை போ சே”.
“லால் சலாம்” திரைப்படமும் கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் திரைப்படம்தான். மேலும் சமீபத்தில் வெளியான ரஜினிகாந்த் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், மொய்தீன் பாயாக ரஜினி நடந்து வர பின்னணியில் கலவரம் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டிருந்தார்கள். இதனை வைத்து பார்க்கும்போது “கை போ சே” திரைப்படத்தின் ஒன்லைனை அடிப்படையாக வைத்து “லால் சலாம்” திரைப்படம் உருவாகி வருவதாக பலர் கூறுகின்றனர்.
இந்த நிலையில் “லால் சலாம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு மீண்டும் “ஜெயிலர்” படக்குழுவுடன் ரஜினிகாந்த் இணையவுள்ளாராம். அதாவது “ஜெயிலர்” திரைப்படத்தின் டப்பிங் பணிகளை ரஜினிகாந்த் தொடங்கவுள்ளாராம். இத்திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 10 ஆம் தேதி வெளிவரவுள்ளது. “லால் சலாம்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் “ஜெய் பீம்” திரைப்படத்தின் இயக்குனரான தா.செ.ஞானவேலுடன் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தா.செ.ஞானவேல் இயக்கும் திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.