கிராமத்து கதாப்பாத்திரங்களில் பின்னி பெடலெடுப்பவர் ராஜ்கிரண். தனது திரைப்படங்களில் வேட்டியை தொடைக்கு மேல் ஏற்றி கட்டி ரவுஸு காண்பிப்பவர். குறிப்பாக ராஜ்கிரண் என்றாலே அவர் கை நிறைய சோற்றை அள்ளி சாப்பிடும் காட்சிதான் நமது நினைவில் வந்துபோகும்.
ராஜ்கிரண் ஒரு நடிகர் மட்டுமல்லாது சிறந்த இயக்குனரும் தயாரிப்பாளரும் கூட. “அரண்மனை கிளி”, “எல்லாமே என் ராசாதான்” ஆகிய திரைப்படங்களில் ராஜ்கிரண் நடித்தது மட்டுமல்லாமல் அத்திரைப்படங்களை தயாரித்து இயக்கவும் செய்திருந்தார். அதனை தொடர்ந்து “நந்தா”, “பாண்டவர் பூமி”, “கோவில்”, “சண்டக்கோழி”, “கிரீடம்”, “முனி” போன்ற பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார் ராஜ்கிரண்.
சமீபத்தில் ராஜ்கிரண் “விருமன்”, “பட்டத்து அரசன்” ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் ஒரு முறை ராஜ்கிரணுக்கு ரஜினிகாந்த் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் அந்த வாய்ப்பை அவர் தவிர்த்துள்ளார். அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
கடந்த 2007 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சிவாஜி தி பாஸ்”. இத்திரைப்படத்தை ஷங்கர் மிக பிரம்மாண்டமாக உருவாக்கியிருந்தார். இத்திரைப்படம் உருவாவதற்கு முன்பு இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ராஜ்கிரணை படக்குழு அணுகியது. அப்போது ராஜ்கிரண், “ரொம்ப மகிழ்ச்சி. ஆனால் என்னால் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க முடியாது. இதில் நிஜமாகவே ஒரு கெட்டவனாக நடிக்க வேண்டும். நான் ஏதோ வாழுகிற வாழ்க்கையில் ஒரு பகுதியை எடுத்து அதில் யதார்த்தமாக நடித்துக்கொண்டிருக்கிறேன். ஆதலால் என்னால் வில்லனாக நடிக்க முடியாது.
இதில் நடித்தால் நிறைய பணம் வரும் என்பது எனக்கு தெரியும். எனக்கு பணம் இப்போது தேவையும் படுகிறது. ஆனால் எக்காரணம் கொண்டும் பணத்திற்காக வில்லன் கதாப்பாத்திரத்திலோ இது போன்று எனக்கு வரவே வராத கதாப்பாத்திரத்திலோ நான் நடிக்கமாட்டேன்” என கறாராக கூறிவிட்டாராம். அதன் பிறகுதான் “சிவாஜி தி பாஸ்” திரைப்படத்தில் வில்லனாக சுமன் நடித்திருக்கிறார்.