தமிழ், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்த சரத்பாபு, சமீப காலமாக செப்சிஸ் நோயால் அவதிபட்டு வந்தார். கடந்த சில நாட்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு, நேற்று திடீரென மரணமடைந்தார். இவரது மரணத்திற்கு தென்னிந்திய திரையுலகினர் அனைவரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சரத்பாபு தனது இளமை காலங்களில் போலீஸ் அதிகாரியாக ஆகவேண்டும் என விரும்பினார். அவரது உருவம் போலீஸ் பணிக்கு தகுதியான உருவமாக இருந்தது. ஆனால் அவருக்கு கிட்ட பார்வை இருந்ததால் அவரால் போலீஸ் பணிக்கு தகுதி பெற முடியவில்லை. அவருடன் பழகியவர்கள் பலரும் அவரை சினிமாவில் நடிக்குமாறு உத்வேகப்படுத்தினார்கள். அதன்படி அவர் சினிமாவில் நடிகராக முயற்சி செய்யத் தொடங்கினார்.
அவர் செய்த முயற்சியின் பலனாக தொடக்க காலகட்டத்தில் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து தமிழில், கே.பாலச்சந்தரின் “பட்டின பிரவேசம்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சரத்பாபு கடந்த 1974 ஆம் ஆண்டு ரமா பிரபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். எனினும் கருத்து வேறுபாடு காரணமாக 1988 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இதனை தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு சினேகா நம்பியார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். எனினும் கருத்து வேறுபாடு காரணமாக 2011 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
சரத்பாபு இரண்டாவதாக திருமணம் செய்த சினேகா நம்பியார் யார் தெரியுமா? பழம்பெரும் வில்லன் நடிகரான நம்பியாரின் மகள்தான் அவர். அதாவது நம்பியாரின் முன்னாள் மருமகனாக இருந்தவர்தான் சரத்பாபு. தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.