ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் திரைப்படம் “கேம் சேஞ்சர்”. இத்திரைப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். அதே வேளையில் ஷங்கர் “இந்தியன் 2” திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.
அதாவது “கேம் சேஞ்சர்” திரைப்படத்தின் பணிகளை அவர் “இந்தியன் 2” பணிகள் தொடங்குவதற்கு முன்பே தொடங்கிவிட்டார். எனினும் கடந்த 2020 ஆம் ஆண்டு “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் மூன்று தொழில்நுட்ப பணியாளர்கள் உயிரிழந்தனர். அதன் பின் “இந்தியன் 2” படப்பிடிப்பு முடங்கிப்போனது. அதனை தொடர்ந்து கொரோனா ஊரடங்கு தொடங்கியதால் அத்திரைப்படம் டிராப் என்றே கூறப்பட்டது.
இந்த இடைவேளையில் “கேம் சேஞ்சர்” திரைப்படத்தின் பணிகளில் மூழ்கினார் ஷங்கர். எனினும் கடந்த ஆண்டு, “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. ஒரே சமயத்தில் இரண்டு திரைப்படங்களின் பணியையும் செய்து வந்தார் ஷங்கர்.
குறிப்பாக “இந்தியன் 2” திரைப்படத்தில் இயக்குனர் அறிவழகன் மற்றும் வசந்தபாலன் ஆகியோர் இணை இயக்குனர்களாக பணியாற்றுகிறார்கள் என்று தகவல் வெளிவருகிறது. அதாவது ஷங்கர் “கேம் சேஞ்சர்” திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது “இந்தியன் 2” திரைப்படத்தின் பணிகளை வசந்தபாலனும் அறிவழகனும் கவனித்துக்கொள்வார்களாம். வசந்தபாலன், அறிவழகன் ஆகியோர் இயக்குனர் ஷங்கரிடம் தொடக்கத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் ஒரே சமயத்தில் நடைபெற்று வரும் நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு முக்கியமான அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அதில், “கேம் சேஞ்சர் படத்தின் கிளைமேக்ஸ் போர்ஷன் முடிவடைந்தது. அடுத்ததாக இந்தியன் 2 படத்தின் சில்வர் புல்லட் காட்சிகளை நாளை படமாக்க வேண்டும்” என படப்பிடிப்பில் தான் இடம்பெற்றிருக்கும் புகைப்படத்தோடு பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதனை வைத்து பார்க்கும்போது “கேம் சேஞ்சர்” திரைப்படத்தின் பணிகள் பெருமாலும் முடிவடைந்துவிட்டதாக தெரியவருகிறது. மேலும் விரைவில் “இந்தியன் 2” திரைப்படத்தின் அப்டேட் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.