சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியபோதே மிக பிரபலமாக திகழ்ந்து வந்தவர். பாண்டிராஜ் இயக்கத்தில் “மெரினா” திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன், அதனை தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். இப்போது சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்.
ரஜினிகாந்த், விஜய் ஆகியோரை தொடர்ந்து அதிகளவில் ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்தவர் சிவகார்த்திகேயன்தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் தனது கலகலப்பான நடிப்பால் கைக்குள் போட்டுக்கொண்டவர். அஜித், விஜய், திரைப்படங்களுக்கு எந்தளவு ஓப்பனிங் இருக்குமோ அதற்கு நிகரான ஓப்பனிங் சிவகார்த்திகேயனின் திரைப்படங்களுக்கும் உண்டு.
சிவகார்த்திகேயன் ஹிரோவாக அறிமுகமான திரைப்படம் “மெரினா”. ஆனால் அவர் அறிமுகமாகியிருக்க வேண்டிய திரைப்படம் என்றால் அது “மனம் கொத்தி பறவை” திரைப்படத்தில்தான். அதாவது இயக்குனர் எழில் தனது “மனம் கொத்தி பறவை” திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாக்கிவிடலாம் என எண்ணி அவரை தனது படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார். அதன் பின் “சிவகார்த்திகேயன் அறிமுகமாகும் திரைப்படம் மனம் கொத்தி பறவை” என்று விளம்பரங்களை வெளியிட தொடங்கிவிட்டாராம் எழில்.
இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் பாண்டிராஜ், சிவகார்த்திகேயனை அணுகி, “மெரினா” திரைப்படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து, ஷூட்டிங்கையும் முடித்துவிட்டாராம். அதனை தொடர்ந்து “மனம் கொத்தி பறவை” திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது. முதல் நாள் படப்பிடிப்பின்போது எழிலிடம் சிவகார்த்திகேயன், “நான் பாண்டிராஜின் மெரினா ஷூட்டிங்கை முடித்து விட்டேன்” என கூறியிருக்கிறார்.
“சிவகார்த்திகேயனை சினிமாவில் அறிமுகப்படுத்தலாம் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், மெரினா படத்தில் நடித்து முடித்துவிட்டாரே” என கொஞ்சம் கவலையில் ஆழ்ந்தாராம் எழில். எனினும் பரவாயில்லை என்று படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். இவ்வாறு சிவகார்த்திகேயன் முதலில் “மனம் கொத்தி பறவை” படத்தில் ஒப்பந்தமாகி, “மெரினா” திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.