சிவகார்த்திகேயன் தற்போது “மாவீரன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை “மண்டேலா” புகழ் மடோன்னே அஸ்வின் இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
“மாவீரன்” திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் “அயலான்” திரைப்படமும் வருகிற தீபாவளி அன்று வெளியாகிறது. இத்திரைப்படம் ஏலியனை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு சைன்ஸ் பிக்சன் திரைப்படமாகும். “இன்று நேற்று நாளை” என்ற சைன்ஸ் பிக்சன் திரைப்படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் “அயலான்” திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் காரணமாக இத்திரைப்படத்தின் வெளியீடு தாமதமாகிக்கொண்டே வந்தது. ஒரு வழியாக இத்திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளிவரும் என படக்குழுவினர் அறிவித்துவிட்டனர்.
“மாவீரன்”, “அயலான்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 21 ஆவது திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளார் என்று ஏற்கனவே பல செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் இன்று சிவகார்த்திகேயனின் 21 ஆவது திரைப்படத்திற்கான பூஜை போடப்பட்டது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ள சாய் பல்லவி, தயாரிப்பாளர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி போன்ற பலரும் இப்பூஜையில் கலந்துகொண்டனர். இத்திரைப்படத்தை கமல்ஹாசன் கிளாப் அடித்து தொடங்கிவைத்தார். தற்போது இத்திரைப்படத்திற்கு பூஜை போடப்பட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் இராணுவ அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இத்திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.