சிவகார்த்திகேயன் நடித்துள்ள “மாவீரன்” திரைப்படம் வருகிற ஜுலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை “மண்டேலா” இயக்குனர் மடோன்னே அஸ்வின் இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
அதே போல் பல வருடங்களாக உருவாகி வரும் “அயலான்” திரைப்படமும் வருகிற தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் ஒரு சைன்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் பல மாதங்களாக கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வந்தன. ஆதலால் இத்திரைப்படத்தின் வெளியீடு தாமதமாகிக்கொண்டே வந்தது. எனினும் ஒரு வழியாக இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளிவரும் என அறிவிப்பு வெளிவந்துவிட்டது. இத்திரைப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன், கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன் இத்திரைப்படத்திற்கு பூஜை போடப்பட்டது. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். ஆதலால் இத்திரைப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை காஷ்மீரில் படமாக்க முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து படக்குழுவினர் காஷ்மீருக்கு பயணமானார்கள். அங்கே 55 நாட்கள் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி அங்கே படப்பிடிப்பும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஜி 20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறவுள்ளது.
மேலும் காஷ்மீரில் சில பகுதிகளிலும் இதற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதலால் காஷ்மீர் பகுதியில் படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறதாம். பாதுகாப்பு அதிகாரிகள் சில பாதுகாப்பு காரணங்களால் படப்பிடிப்பை நிறுத்திவிடும்படி கூறியுள்ளனர். எனினும் ஜி 20 மாநாடு நிகழ்ச்சிகள் நிறைவடைந்தபிறகு மீண்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்படும் எனவும் கூறினார்களாம். அதன்படி சிவகார்த்திகேயன் படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.