தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகராக வலம் வந்த சூரி, சமீபத்தில் வெளியான “விடுதலை” பாகம் 1 திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். அதுவரை ரசிகர்களுக்கு காமெடியனாக தெரிந்த சூரியை, ஹீரோவாக பார்த்த ரசிகர்கள் பலரும் வியந்து போனார்கள்.
“விடுதலை” திரைப்படத்தில் ஒரு அப்பாவி கான்ஸ்டபிளாக மிகவும் யதார்த்தமாக நடித்திருந்தார் சூரி. ஒவ்வொரு காட்சியிலும் சூரியின் எக்ஸ்பிரஷன் மிகவும் அற்புதமாக இருந்ததாக பலரும் பாராட்டினார்கள். உயர் அதிகாரிகள் தண்டனை கொடுக்கும்போது அதனை தாங்கிக்கொண்டு செய்யும்போதும் சரி, தனது காதலியை துன்பப்படுத்தும்போது வரும் குமுறலை வெளிக்காட்டும்போதும் சரி, சூரி நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார்.
இத்திரைப்படத்தின் மூலம் சூரி வேறு ஒரு பரிமாணத்தை காட்டியுள்ளார். இவரது யதார்த்த நடிப்பை பார்த்து பல ரசிகர்களும் விமர்சகர்களும் பாராட்டி வந்தனர். தற்போது வெற்றிமாறன் “விடுதலை” இரண்டாம் பாகத்தை படமாக்கி வருகிறார். இரண்டாம் பாகத்த்தில் சூரியின் நடிப்பை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சூரி தற்போது இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் சாகசம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது இலங்கையில் அவர் ஒரு கயிற்றில் தொங்கியபடியே அந்தரத்தில் அந்த கயிற்றின் உதவியோடு விர்ரென செல்கிறார். சூரி துளி கூட பயப்படாமல் ஒரு கையால் செல்ஃபீ வீடியோ எடுத்துக்கொண்டே செல்கிறார். அதனை பார்க்கும் ரசிகர்கள் ஆரவாரத்தோடு கூச்சலிடுகிறார்கள்.
இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சூரி. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவின் கம்மென்ட் பகுதியில் சூரியின் தைரியத்தை பாராட்டி தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.