ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் “லால் சலாம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க, லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது.
இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இத்திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படமாகும். இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது “லால் சலாம்” திரைப்படம் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ளது. இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மோகன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு லைகா நிறுவனத்திற்கு கால்பந்து விளையாட்டை அடிப்படையாக வைத்து ஒரு கதையை அனுப்பியிருக்கிறார். அதனை தொடர்ந்து லைகா நிறுவனத்தில் இருந்து இவருக்கு எந்த பதிலும் வரவில்லையாம்.
அதனை தொடர்ந்து “லால் சலாம்” திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. நாம் கால்பந்து விளையாட்டை அடிப்படையாக வைத்து எழுதிய கதையைத்தான் இவர்கள் கிரிக்கெட்டாக மாற்றி படமாக்கி வருகிறார்களோ? என மோகன் கேள்வி எழுப்பியுள்ளாராம்.
மோகன் எழுதிய கதையில் கால்பந்து விளையாட்டில் இரு நண்பர்களுக்கு நடக்கும் பிரச்சனையை அடிப்படையாக வைத்து கதை நகருமாம். அதே போல் கிரிக்கெட் விளையாட்டில் இரு நண்பர்களுக்கு நடக்கும் பிரச்சனையை வைத்து கதை நகர்வது போல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “லால் சலாம்” திரைப்படத்தை உருவாக்கி வருகிறாரோ என சந்தேகம் எழுந்துள்ளதாக மோகன் கூறுகிறாராம்.
ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தான் மோகன் எழுதிய கதையை படித்துப்பார்ததாகவும் தன்னுடைய கதைக்கும் மோகன் எழுதிய கதைக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை என கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.