“துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார், “விடா முயற்சி” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அஜித்குமார் கார் ரேஸ், பைக் ரேஸ் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். சமீப காலமாக அஜித்குமார் இந்தியாவின் பல ஊர்களுக்கு பைக் டூர் சென்று வருகிறார். இந்த நிலையில் அஜித்குமாரின் மேனேஜரான சுரேஷ் சந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் அஜித்குமார் பைக் டூர் போனதற்கான வரைப்படங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதில் அஜித்குமார், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சுற்றிவிட்டு நேபாள், பூடான் ஆகிய நாடுகளிலும் தனது பயணத்தின் மூலம் கடந்துள்ளார். அதன் பின் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தபிறகு நவம்பர் மாதம் தனது கனவுப்பயணத்தை தொடங்கவுள்ளார்.
அதாவது உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளுக்கு பைக் டூர் செல்லவுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த சுரேஷ் சந்திரா, “சவாலான நிலப்பரப்புகளின் மத்தியிலும் மோசமான வானிலைகளின் மத்தியிலும் அஜித் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நேபாள் பூடான் ஆகிய பகுதிகளிலும் பயணித்துள்ளார். அஜித் அடுத்த கட்டமாக நவம்பர் 2023-ல் உலக சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார்” என்று கூறியிருக்கிறார்.
“விடாமுயற்சி” திரைப்படத்திற்கு பிறகு அஜித்குமார் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் படப்பிடிப்பிற்கு இடைவெளி விடப்போவதாகவும் அந்த இடைவெளியில் உலக சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்திருந்த நிலையில் தற்போது நவம்பர் மாதம் தனது உலக சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.