“ஜெயிலர்”, “லால் சலாம்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த் “ஜெய் பீம்” இயக்குனர் தா.செ.ஞானவேலுடன் கைக்கோர்க்கவுள்ளார் என்பது ரசிகர்கள் பலரும் அறிந்த ஒன்றே. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.
தற்போது ரஜினிகாந்த் “லால் சலாம்” திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில், “தலைவர் 170” குறித்து பல தகவல்கள் அனுதினமும் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. தா.செ.ஞானவேல் இதற்கு முன்பு இயக்கிய “ஜெய் பீம்” திரைப்படம் ரசிகர்களிடையே ஒரு அதிர்வலையையே உண்டு செய்தது. காவல்துறையின் அராஜகத்தை நம் கண் முன் கொண்டு வந்திருந்தது அத்திரைப்படம். ஒரு பக்கம் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் “இத்திரைப்படம் எங்கள் சமூகத்திற்கு எதிராக இருப்பதாக” கூறி நீதிமன்றப்படிகளை ஏறினார்கள். இவ்வாறு பல பாராட்டுக்களையும் சர்ச்சைகளையும் உள்ளடக்கிய திரைப்படமாக “ஜெய் பீம்” அமைந்தது.
“ஜெய் பீம்” திரைப்படம் போலவே ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படமும் அதிகார அரசியலை பேசும் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இத்திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைக்க சீயான் விக்ரமிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. மேலும் விக்ரமிற்கு மிக அதிகமான சம்பளமும் பேசப்பட்டதாக தெரியவந்தது. ஆனால் விக்ரம் இன்னும் சரியான பதிலை அளிக்கவில்லையாம்.
ஒரு வேளை விக்ரம் நடிக்கவில்லை என்றால் ஆக்சன் கிங் அர்ஜூனை வில்லனாக நடிக்க வைக்கலாம் என படக்குழு பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளதாம். அர்ஜூன் ஏற்கனவே தற்போது விஜய்யின் “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
“லியோ” திரைப்படத்திலும் ஒரு பயங்கர கேங்கஸ்டராக நடித்து வருகிறார் அர்ஜூன். இந்த நிலையில் “தலைவர் 170” திரைப்படத்திலும் வில்லனாக நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.