“தளபதி 68” திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளது அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
வெங்கட் பிரபு பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சைன்ஸ் பிக்சன் கதையை விஜய்யிடம் கூறினார். ஆனால் விஜய்யால் அப்போது அதில் நடிக்க முடியவில்லை. வெங்கட் பிரபு-விஜய் கூட்டணி நிச்சயமாக ஓர் நாள் அமையும் என பல ரசிகர்கள் பல வருடங்களாக காத்துக்கொண்டிருந்தனர். தற்போது ரசிகர்களுக்கு உற்சாகம் தரும்படி இந்த திரைப்படம் அமைந்துவிட்டது.
வெங்கட் பிரபு, இதற்கு முன் இயக்கிய திரைப்படங்கள் பெருமாலும் காமெடியை முதன்மையாக கொண்டு உருவாக்கிய திரைப்படங்களே அதிகம். “மங்காத்தா” திரைப்படத்தை தவிர மற்ற திரைப்படங்களில் காமெடி ஒரு முன்னணி பங்கை வகுத்திருக்கும். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்ட வெங்கட் பிரபு, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது ஒரு ரசிகர், “நீங்கள் எப்போதுமே ஜாலியான திரைப்படங்களைத்தான் இயக்குகிறீர்கள். இதுவே நீங்கள் ஒரு சீரியஸான திரைப்படத்தை எடுக்க முயன்றால் அதற்காக எப்படி உங்களை தயார்படுத்திக்கொள்வீர்கள்?” என கேட்டார்.
அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, “நான் சீரியஸா எடுத்த படங்கள் எல்லாம் ஓடமாட்டிக்கின்றன. நானும் வெற்றிமாறன் மாதிரி சீரியஸா ஒரு படம் எடுக்கனும்னு எடுத்தா என்னடா இவன் இப்படி எடுத்து வச்சிருக்கான்னு சொல்றாங்க. பார்வையாளர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது ஒரு என்டெர்டெயின்மென்டான படத்தைத்தான்” என்று கூறியிருந்தார். இதன் மூலம் “தளபதி 68” திரைப்படம் வழக்கம்போல் வெங்கட் பிரபுவின் ஜாலியான ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.