“தளபதி 68” திரைப்படத்தை குறித்து சமீப காலமாக பல தகவல்கள் வெளிவந்துகொண்டிருந்தன. முதலில் இத்திரைப்படத்தை அட்லீ இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் “ஜவான்” திரைப்படத்தின் பணிகளே முடிவடையாத நிலையில் அட்லீ இயக்குவதற்கு வாய்ப்பில்லை என தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மல்லினேனி “தளபதி 68” திரைப்படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இந்த செய்தியால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். இதற்கு முன் விஜய்யின் “வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி என்ற தெலுங்கு இயக்குனர்தான் இயக்கியிருந்தார். அந்த சமயத்திலேயே பல விமர்சனங்கள் எழுந்தன. ஆதலால் மீண்டும் விஜய் ஒரு தெலுங்கு இயக்குனருடன் இணைவதை ரசிகர்கள் விரும்பவில்லை.
அதனை தொடர்ந்து சில நாட்களாகவே “தளபதி 68” திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டன. எனினும் முதலில் ரசிகர்கள் இந்த செய்தியும் வதந்திதான் என நினைத்து வந்தனர். ஆனால் அவர்களே ஆச்சரியப்படும் விதமாக நேற்று “தளபதி 68” திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.
“தளபதி 68” படத்தை வெங்கட் பிரபு இயக்குவது உறுதியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். “புதிய கீதை” திரைப்படத்தை அடுத்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார் யுவன். இவ்வாறு ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இந்த அறிவிப்பு.
இந்த நிலையில் “தளபதி 68” திரைப்படத்தை குறித்த ஒரு மாஸ் ஆன தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது “தளபதி 68” திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இத்தகவலை குறித்து அதிகாரப்பூர்வ செய்தி விரைவில் வெளிவரும் எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் மற்றும் நடிகரான எஸ்.ஜே.சூர்யா இதற்கு முன் விஜய்யின் “மெர்சல்” திரைப்படத்தில் பயங்கரமான வில்லனாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து “வாரிசு” திரைப்படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் வந்து போனார். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் ஹிட் அடித்த “மாநாடு” திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.