கடந்த 2002 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி, சூர்யா, சினேகா, லைலா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “உன்னை நினைத்து”. அதன்படி இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 வருடங்கள் முடிவடைகிறது.
“உன்னை நினைத்து” திரைப்படம் தமிழ் சினிமாவின் ஃபீல் குட் திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படமாகும். இத்திரைப்படத்தை விக்ரமன் இயக்கியிருந்தார். விக்ரமன் பாணி திரைப்படங்களை குறித்து நாம் தனியாக கூறத்தேவையே இல்லை. அவரது ஒவ்வொரு திரைப்படங்களிலும் காதல் காட்சிகளும் சென்டிமென்ட் காட்சிகளும் பார்வையாளர்களின் மனதை உருகவைப்பது போல் இருக்கும். அதே போல் “உன்னை நினைத்து” திரைப்படமும் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்த திரைப்படமாக அமைந்திருக்கிறது.
சூர்யாவும் லைலாவும் காதலித்து வர, லைலாவின் குடும்பத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார் சூர்யா. ஆனால் ஒரு கட்டத்தில் வேறு ஒரு வசதியான ஆண்மகன் கிடைக்க லைலா , சூர்யாவின் காதலை கைக்கழுவிவிடுகிறார். அந்த ஆண் சூர்யாவின் நண்பராக இருந்திருப்பார். லைலாவுக்கு நிச்சயிக்கப்பட்ட ஆண் மிகவும் மோசமான நபர். இது சூர்யாவுக்குத் தெரியவர லைலாவை எச்சரிக்கிறார். ஆனால் இந்த விஷயத்தை லைலா நம்பாமல் சூர்யாவை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார். இந்த சோக காதல் கதையை தன் மீது ஒரு தலை காதல் வைத்திருக்கும் சினேகாவிற்கு கூறுகிறார். எனினும் சினேகாவிற்கு அதிகமாகவே அவர் மீது காதல் மலர்கிறது. இதனை தொடர்ந்து லைலாவை சூர்யா மீண்டும் சந்திக்க நேர்கிறது. லைலா அந்த ஆண்மகனால் ஏமாற்றப்பட்டது தெரியவர, லைலாவின் எம்.பி.பி.எஸ். கல்விக்கு உதவுகிறார் சூர்யா.
அதன் பின் லைலாவும் டாக்டராக, சூர்யாவிடம் மீண்டும் தனது காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால் ஏற்கனவே சினேகா தனக்காக நிறைய தியாகங்கள் செய்து தன்னைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்று உறுதியாக இருப்பதை நினைத்துப்பார்க்கும் சூர்யா, லைலாவின் காதலை ஏற்க மறுக்கிறார். இறுதியில் சூர்யாவும் சினேகாவும் இணைவது போல் படம் நிறைவடையும்.
“உன்னை நினைத்து” திரைப்படத்தில் இடம்பெற்ற காதல் காட்சிகள் அனைத்தும் இப்போதும் ரசிக்கும்படியாக இருக்கும். குறிப்பாக சினேகா சூர்யாவின் நன்னடத்தைகளை கவனித்து வரும் காட்சிகளிலும் சரி, தன்னை லைலா கைக்கழுவிவிட்டாலும் அவரின் படிப்பிற்காக சூர்யா உதவிகள் செய்யும் காட்சிகளிலும் சரி மிகவும் உன்னதமான ஒரு உணர்வை கொடுக்கக்கூடிய காட்சிகளாக அமைந்திருக்கும்.
இவ்வாறு 90’ஸ் கிட்ஸ்களின் விருப்பமான திரைப்படமாக அமைந்திருக்கும் “உன்னை நினைத்து” திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இத்திரைப்படத்தில் முதலில் விஜய்தான் ஹீரோவாக ஒப்பந்தமானார். விஜய்யை வைத்து ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இத்திரைப்படத்தில் இருந்து விஜய் வெளியேறிவிட்டார். அதன் பிறகுதான் இத்திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்தார். இத்திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.