வடிவேலு வாய்ஸ், ரஹ்மானின் மியூசிக்… களைகட்டப்போகும் மாமன்னன் பாடல்… செம அப்டேட்

- Advertisement -

“இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” திரைப்படத்தின்போது வடிவேலு சரியாக ஒத்துழைப்பு தராத காரணத்தால் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஷங்கர், தயாரிப்பு சங்கத்தில் புகார் அளித்தார். தன்னுடைய திரைப்படத்தில் ஒத்துழைப்பு தராத காரணத்தால் தனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக வடிவேலு மீது குற்றஞ்சாட்டினார். இந்த புகாரை தொடர்ந்து வடிவேலு திரைப்படங்களில் நடிக்க ரெட் கார்டு போடப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு வடிவேலு மீதான ரெட் கார்டு நீக்கப்பட்ட நிலையில் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”, “மாமன்னன்”, “சந்திரமுகி 2” ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமானார். இதில் அவர் கதாநாயகனாக நடித்த “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படம் சரியாக ஓடவில்லை. மேலும் அத்திரைப்படத்தில் காமெடி காட்சிகளும் சிறப்பாக அமையவில்லை. இதனை தொடர்ந்து “மாமன்னன்”, “சந்திரமுகி 2” ஆகிய திரைப்படங்களில் வடிவேலு நடித்து முடித்துள்ளார். இதில் “மாமன்னன்” திரைப்படம் விரைவில் வெளிவருகிறது.

- Advertisement -

“மாமன்னன்” திரைப்படத்தில் வடிவேலுவுடன் கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் முதல்முறையாக மாரி செல்வராஜ்ஜோடு இணைந்து பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரி செல்வராஜ் இதற்கு முன் இயக்கிய “பரியேறும் பெருமாள்”, “கர்ணன்” ஆகிய திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்தன. மேலும் இத்திரைப்படங்கள் சாதிய ஏற்றத்தாழ்வை கடுமையாக விமர்சித்திருந்தன. குறிப்பாக “கர்ணன்” திரைப்படத்திற்கு பல சர்ச்சைகளும் எழுந்தது. இதனை தொடர்ந்து “மாமன்னன்” திரைப்படம் வழக்கமான மாரி செல்வராஜ் பாணியில் உருவாகியிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதில் வடிவேலு மாமன்னன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாலும், இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாலும் இத்திரைப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது மாரி செல்வராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் “மாமன்னன்” திரைப்படத்தை குறித்து ஒரு சுவாரஸ்யமான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதாவது இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை வடிவேலு தனது சொந்த குரலில் பாடியுள்ளார். இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். இது குறித்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்த மாரி செல்வராஜ், “இசைப்புயலுடன் பிரவேசித்த வைகைப்புயல்” என்று குறிப்பிட்டுள்ளார். இப்பாடல் சிங்கிளாக விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்