விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. வெளியீட்டிற்கு இன்னும் 5 மாதங்களே இருப்பதால் இத்திரைப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
விஜய், “லியோ” திரைப்படத்தில் ஒப்பந்தமானபோதே விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தை அட்லி இயக்குவதாக பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் அட்லி பாலிவுட்டில் தற்போது இயக்கிவரும் “ஜவான்” திரைப்படத்தின் பணிகளே இன்னும் முடியவில்லை. ஆதலால் அட்லி இயக்க வாய்ப்பில்லை என்பது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனரான கோபிசந்த் மல்லினேனி, விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. இந்த செய்தி விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஏனென்றால் கோபிசந்த் மல்லினேனி சமீபத்தில் தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து “வீர சிம்ஹா ரெட்டி” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் தமிழ் ரசிகர்களால் நம்பமுடியாத அளவுக்கு பயங்கரமான சண்டை காட்சிகள் இருந்தன.
ஏற்கனவே விஜய், “குருவி”, “வில்லு”, “வேட்டைக்காரன்” ஆகிய திரைப்படங்களில் செய்த நம்பமுடியாத ஸ்டன்ட் காட்சிகளால் கேலிக்குள்ளாக்கப்பட்டார். அது போக ஏற்கனவே “வாரிசு” திரைப்படத்தை இயக்கிய வம்சி பைடிப்பள்ளியும் ஒரு தெலுங்கு இயக்குனர்தான். ஆதலால் மீண்டும் விஜய் ஒரு தெலுங்கு இயக்குனருடன் இணைவதை ரசிகர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இதனை தொடர்ந்து கோபிசந்த் மில்லினேனியின் பெயர் தற்போது பேச்சில் இல்லாமல் போய், வெங்கட் பிரபுவின் பெயர் இணைந்துள்ளது. அதாவது “தளபதி 68” திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகவலை குறித்த உண்மைத்தன்மை வெளிவரவில்லை. எனினும் ரசிகர்கள் வெங்கட் பிரபு காம்பினேஷனில் விஜய் நடிப்பதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கின்றனர்.
இந்த நிலையில் வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் விஜய்யை குறித்து பகிர்ந்துகொண்ட சம்பவம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது “மங்காத்தா” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒரு நாள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோரை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தாராம் விஜய். அப்போது விஜய், “மங்காத்தா படத்தில் அர்ஜூன் ரோலில் என்னை கேட்டிருந்தால் நான் நடித்திருப்பேன்” என கூறினாராம். இதனை கேட்டதும் ஆச்சரியமாய் இருந்ததாம்.
அதே போல், வெங்கட் பிரபுவிடம், “உங்களது இயக்கத்தில் ஒரு வேளை நான் நடிப்பதாக இருந்தால் அந்த படத்தில் வெங்கட் பிரபு நடிக்கக்கூடாது” என நக்கலாக ஒரு கண்டிஷனையும் போட்டாராம்.