விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பல வருடங்களாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. சமீபத்தில் கூட தனது பனையூர் இல்லத்தில் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகளை நேரில் அழைத்து விஜய் கலந்துரையாடல் நடத்தினார். அதில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடப்போவதகாவும் அது குறித்து பேசுவதற்காகத்தான் மாவட்ட நிர்வாகிகளை அழைத்திருந்தார் எனவும் கூறப்பட்டது.
விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல நற்பணிகள் செய்து வருவதை பலரும் அறிவார்கள். இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்த மாணவி நந்தினியை விஜய் மக்கள் இயக்கத்தினர் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த பிளஸ் 2 தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600க்கு 600 எடுத்து சாதனை படைத்திருக்கிறார். இவர் திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலை பள்ளியில் கணக்குப்பதிவியல் பாடப்பிரிவில் படித்தவர். இவர் திண்டுக்கல் பகுதியின் பொன் சீனிவாசன் நகரைச் சேர்ந்த சரவணன்-பாலப்பிரியா தம்பதியினரின் மகள். இவர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன் போன்ற ஆறு பாடங்களிலும் 100க்கு 100 எடுத்திருக்கிறார்.
மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற நந்தினியை தமிழக முதல்வர் நேரில் அழைத்து பாராட்டினார். இந்த நிலையில் திண்டுக்கல் விஜய் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் நந்தினியை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தினர் நந்தினியை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.